Wednesday, March 31, 2010

இனியவை நாற்பது பதிப்பு வரலாறு . 1844 - 1949

   கோ.சதீஸ்
                             இளநிலை ஆய்வாளர்,
   செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,
                   சென்னை-5
                இனியவை நாற்பது:
பனுவற்புரிதலைக் கட்டமைக்கும் பதிப்பும் உரையும்
இனியவை நாற்பது பதினெண்கீழ்க்கணக்கு நூற்களுள் ஒன்று. இந்நூல் நான்கு வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. அவை,  இனியா நாற்பது (1845),  இனியது நாற்பது (1903), இனியவை நாற்பது (1904),  இனிது நாற்பது (1909, 1928) . என்பனவாகும் இந்நூலின் அச்சுப்பதிப்பின் வரலாறு இங்கு ஆராயப்படுகிறது. 1950க்கு முன் வந்த பதிப்புகள் குறிப்பாக 1903,1909,1922,1928,1949 ஆகிய  ஆண்டுகளில் வெளிவந்த பதிப்பிக்களையும் உரைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
                                                       I
இனியவை நாற்பது
இனியவை நாற்பது “வைதிக சமயம் சார்ந்தது; அமைப்பு அடிப்படையில் இன்னா நாற்பதை ஒத்து காணப்படுகிறது. ஆனால், இனியவைகளைத் தொகுத்துக் கூறுவது. இன்னா நாற்பதில் இன்னா என்று கூறப்படுபவை சிலவற்றின் எதிரிடையான கருத்துகள் இனியவை என்று கூறப்படுகின்றன. கொல்லாமை, புலாலுண்ணாமை, அந்தணர் பற்றிய கருத்துகள் ஆகியவை பற்றிக் கூறுகிறது.”1 ஏருடையான் வேளாண்மை செய்தல் இனிது, தவசிகள் மாண்பு இனிது,  பிராமணருக்கு ஆவோடு பொன் ஈதல் இனிது, விலைமகளிரை விடமெனக் கருதி அணுகாமை இனிது, வட்டியால் பொருள் ஈட்டுவான் நீதி தவறி நடவாமை இனிது என்பன போன்று 127 இனியவைகளை இந்நூல் தொகுத்துக் கூறுகிறது.
பனுவல் :  காலம்
இனியவை நாற்பதின் காலம் பற்றித் தமிழ் அறிஞர்களிடையே  வெவ்வேறு கருத்துக்கள் நிலவி வந்துள்ளன. கா.சுப்பிரமணியப் பிள்ளை (1930),  பாலூர் கண்ணப்ப முதலியார் (1962) இருவரும் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு எனத் தெரிவித்துள்ளனர். “கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட சமண சங்க காலத்திலும் இயற்றப்பெற்றன. கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்னும் நான்கு நூல்களும் கடைச்சங்கத்தார் காலத்தில் இயற்றப் பெற்றனவே.”2 எஸ்.வையாபுரிபிள்ளை (1949) கி.பி. 9ஆம் நூற்றாண்டு  எனச்  சில காரணங்களைக் கூறி முன்வைக்கின்றார். இந்நூல் பற்றிய முதல் குறிப்பு வீரசோழியத்தில் இடம்பெறுகிறது. பூதஞ்சேந்தனார் செய்த இந்தப் பனுவலின் காலம் கி.பி. 825 என  *History of Tamil Language and literature என்னும் ஆங்கில நூலில் வையாபுரிப் பிள்ளை குறிப்பிடுகிறார். மேலும், 1949ஆம் ஆண்டு அவர் பதிப்பித்த இனியவை நாற்பதின் முன்னுரையில் இதனுடைய காலத்தை விரிவாக ஆராய்கின்றார். சங்கங்கள் பற்றிய கருத்து, ஆசிரியர் பெயர் ஒற்றுமை, பாடவேறுபாட்டைப் பிற இலக்கியம் மற்றும் கல்வெட்டுச் சான்றுகளின் மூலம் ஒப்பிடுதல், பனுவலில் இடம்பெறும் மக்களின் வாழ்வியல் கூறுகளோடு ஒப்பிட்டு ஆரய்ந்து தக்க சான்றுகளின் அடிப்படையில் இதன் காலத்தைக் கி.பி. 9 என்று அவர் வரையறுக்கிறார்.    
1.சங்கங்கள் 
கி.பி.5ஆம் நுற்றாண்டு வச்சிரநந்தியின் திரமிள சங்கம் இயங்கியது. கி.பி. 950 சிந்தாமணி இயற்றப்பட்ட காலத்தில் மதுரையில் ஒரு  தமிழ்ச்சங்கம் இருந்தது. கி.பி. 5க்கும் கி.பி.10ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் பல சங்கங்கள் இருந்தன. ஆக கடைச்சங்க நூல் என்பதன் அடைப்படையில்  இதனைக் கி.பி. 5ஆம் நூற்றாண்டு எனத் தீர்மானிக்க இயலாது எனத் தன் கருத்தை முன்வைக்கின்றார்.
2.ஆசிரியர் பெயர் ஒற்றுமை
திரிகடுகத்தின் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு. இதன் ஆசிரியர் ஓர் ஏட்டுப்பிரதியில் மதுரை ஆசிரியர் மகனார் கணிமேதாவியார் என்று குறிப்பு உள்ளது. இனியவை நாற்பதின் ஆசிரியரும் மதுரை ஆசிரியர் மகனார் என அடைமொழியொடு வழங்கப்படுவதால் இது கி.பி. 8ஆம் நூற்றாண்டின் இடை பகுதியாக இருக்கலாம்.
3.பாடபேதம்
பாடல் 40இல் பேராசை என்பதற்குப் பொலிசை என்னும் பாடம் உள்ளது. ஓர் ஏட்டுப்பிரதியின் பழைய உரையில் பொலிசை என்னும் சொல்லுக்குப் பாடபேதம் இல்லாததால் இதுவே மூல பாடமாக இருத்தல் வேண்டும் என நிறுவுகிறார். மேலும், இச்சொல் சீவகசிந்தாமணியிலேதான் முதன் முதலில் பதிவாகியுள்ளது. புறப்பொருள் வெண்பாமாலையில் பொலிசை என்பதன் வேற்று வடிவமாகிய பலிசை என்பது வழங்குவதால் அப்பனுவல் தோன்றிய காலத்திலே இதுவும் தோன்றியிருக்க வேண்டும் சாஸன வழக்கால் இதனை நிறுவுகிறார்.
4.கல்வெட்டு (சாஸன வழக்கு)
இராஜராஜ தேவர்க்கு 29-வது ஆண்டில் கி.பி.1009 தோன்றிய சாஸனத்தில் (S.I.I.II.பக்.70) காசு ஒன்றுக்கு ‘ஆட்டை வட்டன் முக்குறுணி நெல்லுப் பொலிசையாக’ என வருகிறது. இதற்கு 125 ஆண்டிற்கு முன் வாழ்ந்த வரகுணமகாராஜாவின் சாஸனத்தில் (கி.பி. 875) பொலிசை என்பதன் முன் வடிவமாக பொலியூட்டு எனப் பல இடங்களிலும் சுட்டப்பட்டுள்ளன. (Epigraphia Indica XXI, No.17, 7-10) கி.பி.9க்கு முன் பொலிசை என்னும் சொல் இலக்கியத்திலும் சாஸனத்திலும் இடம் பெற்றதாகத் தெரியவில்லை எனத் தனது முன்னுரையில்  வையாபுரிப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சொல்லின் அடிப்படையில் காலநிர்ணயம் செய்வதில் ஐயம் தோன்றலாம், அந்தச் சொல் பதிவுசெய்யப்பெற்ற படைப்பிற்குமுன் மக்களிடம் வழங்கியிருக்க வாய்ப்பு உண்டு. சமூகத்தில் மறுஉற்பத்தியின் வளர்ச்சியே வாழ்க்கையின் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன. மக்களின் பயன்பாட்டுத் தேவையில் இருந்தே சொற்களும் தோன்றுகின்றன. அவ்வாறும் புதிய புதிய வளர்ச்சி, அதற்கான சொற்களையும் உருவாக்கிக்கொண்டே செல்லும் அது மிகுதியான அரசு ஆவணம் சார்ந்து புழங்குகிறபோது இலக்கியகளிலும் கல்வெட்டு / சாசனங்களிலும் பதிவு பெறுவது இயல்பானது. அவ்வகையில் அச்சொல் தோன்றி இலக்கியப் பயன்பாட்டிலும் சாசன வழக்கிலும் காணப்படுகின்ற காலத்தின் அடிப்படையில் பேராசிரியார் இந்நூலின் காலத்தினை உறுதி செய்துள்ளார். இச்சொல் எந்த அச்சுப்பதிப்பிலும் இடம்பெறவில்லை. பழைய ஏட்டுச்சுவடியில் இருப்பதாக வையாபுரிப்பிள்ளை தம் முன்னுரையில் எழுதியுள்ளார். உ.வே.சா. நூலகத்தில் உள்ள இனியவை நாற்பது சுவடி ஒன்றில்  பொலிசை என்னும் பாடம் உள்ளது. உ.வே.சா. நூலகத்தில் உள்ள கையெழுத்துப் பிரதியிலும் பொலிசை என்னும் பாடமே உள்ளது.
5.பிரம்ம தேவர் வழிபாடு
பிரம்ம தேவர் வணக்கம் பின் சாளுக்கியர் காலத்தில் வழக்கில் இருந்தது. இதன் காலம் கி.பி.973 முதல் கி.பி.1138 வரை என்று வரையறுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் இவ்வணக்கம் கி.பி.9ஆம் நூற்றாண்டில் வழக்கிற்கு வந்தது. இந்நூலின் முதல் பாடல் பிரம்ம தேவ வணக்கம் பற்றிக் குறிப்பிடுவதால் இதன் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தோன்றியதாகக் கொள்ளலாம் எனத் தனது சான்றுகளை முன்வைக்கின்றார்.
மேற்குறித்த சான்றுகளின் அடிப்படையில் இதனுடைய காலத்தைக் கி.பி.9ஆம் நூற்றாண்டு எனத்   தீர்மானிக்கின்றார்.
உரை :  காலம் மற்றும் உரைவேறுபாடுகள்
இந்நூலின் உரையைப் பொறுத்தவரை பழையவுரை மற்றும் அச்சுப்பதிப்பாக மாறிய  காலத்தில் தோன்றிய உரை என இரண்டு நிலைகளில் பகுத்துக்கொள்ளலாம். பனுவல் அச்சுப் பதிப்பாகும் காலத்தில் தோன்றிய உரை மரபு அடிப்படையிலான புதிய உரைகள் எனலாம். பழைய உரையை யார் இயற்றியவர் என்னும் குறிப்பு, அது தோன்றிய காலம் முதலியவை திட்டவட்டமாக வரையறுக்க இயலாத நிலையில் உள்ளன. அச்சுப்பதிப்பில் நான்கு வகையான உரைகள் காணப்படுகின்றன. அவை பாடலுக்கான பதவுரை, கருத்துரை, விருத்தியுரை  மற்றும் பழையவுரை ஆகியனவாகும். 1903ஆம் ஆண்டின் பதிப்பில் தமிழ்ப் பண்டிதர் ஸ்ரீ உப.வே.வை.மு.சடகோபராமாநுஜாசாரிய ஸ்வாமிகள் அனுப்பி உதவியுள்ளார்’ என்னும் குறிப்பு உள்ளது. எஸ்.வையாபுரிப் பிள்ளை பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பழையவுரையும் 1903ஆம் பதிப்பில் உள்ள உரையும் ஒன்றாகக் காணப்படுவதால்  1903ஆம் ஆண்டின் பதிப்பு, பழைய உரையாகக் கொள்ள இடம் உள்ளது.
1909 ஆம் ஆண்டு வந்த இராமசாமி நாயுடுவின் விருத்தியுரையும் 1928 ஆம் ஆண்டு வந்த கா.ர.கோ. உரையும் ஒரே அமைப்பில் உள்ளன. (1928 நான்காம் பதிப்பு ஒருவேளை முதல் பதிப்பில் இருந்தே இது போன்ற அமைப்பில் இருந்திருக்கலாம் )  இவ்விரண்டு பதிப்புகளிலும் உரையின் அமைப்பு, பாடல் அதனைத்தொடர்ந்து பதவுரை, கருத்துரை, மற்றும் விசேடவுரை (விருத்தியுரை) ஆகிய மூன்று பகுதிகளும் அடங்கியவையாக காணப்படுகின்றன.
1922 ஆம் ஆண்டு வெளிவந்த வா.மகாதேவ முதலியார் பதிப்பில், கழகத்தின்  வேண்டுகோளுக்கு இணங்க உரை எழுதியுள்ளேன் என முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். பாடலைத் தொடந்து பதவுரை காணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மேற்கோளுடன் கூடிய ஒப்புமை பகுதிகளும் விளக்கங்களும் காணப்படுகின்றன.  
1949ஆம் ஆண்டு வெளிவந்த எஸ்.வையாபுரிப் பிள்ளை பதிப்பில் பழைய உரையும் விளக்க உரையும் காணப்படுகின்றன. இவ்வுரையை இதற்கு முன் உள்ள பதிப்பில் இருந்தே பேராசிரியர் பெற்றுள்ளார். 18 ஆம் பாடல், சில பதிப்புகளில் இடம்பெறவில்லை அடிக்குறிப்பில் “இச்செய்யுளுக்குப் பழைய உரை காணப்படவில்லை. இங்குக் கொடுத்திருப்பது பதிப்பாளர் எழுதிய புத்துரை.” (ச.வை.1949, ப.10) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய உரைக்குக் கீழ் விளக்கவுரையும் தனிப்பகுதியாக ஆராய்ச்சிக்குறிப்பினையும் கொடுத்துள்ளார்.
பனுவல் தோன்றுவதற்கான சமூகத் தேவை
பண்டைத் தமிழ்ப் பனுவல்கள் இலக்கிய நூல்களாக மாத்திரமின்றி, சமூகவியல், அரசியல், பொருளியல் ஆவணங்களாகவும் கருதப்படுகின்றன. 3தினெண்கீழ்க்கணக்கு நூற்களில் 11 நூல்கள் அற இலக்கியங்களைக் கொண்டவை. அவை சமயம் சார்ந்ததாகக் கருதப்படினும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்களால் எழுதப்பட்டவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இனியவை நாற்பதைப் பொறுத்தமட்டில் இன்னா நாற்பது தோன்றிய பிறகே இந்நூல் தோன்றியிருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகின்றனர். இன்னா நாற்பதில் உள்ள சுவை இனியவை நாற்பதில் இல்லை என்ற கருத்தும் உள்ளது. எஸ்.வையாபுரிப் பிள்ளை திரிகடுகத்திற்கும் இனியவை நாற்பதுக்கும் பல ஒற்றுமை உள்ளதாக இனியவை நாற்பதின் முன்னுரைப் பகுதியில் சுட்டியுள்ளார்.  இன்னா நாற்பது, இனியவை நாற்பது இரண்டும் ஒரே அமைப்புடையன. கருத்தை மக்களிடம் கொண்டுசெல்லும் இந்த இலக்கியம் சொல்லும் விதம் வேறாக இருக்கலாம். ஆனால், சொல்ல வரும் பொருள் ஒன்றாகவே உள்ளது. பொருண்மை அடிப்படையில் பதினொரு அற இலக்கியங்களின் அறங்களை வகைப்படுத்தல் வேண்டும். தொகுத்த அறங்களை எவை, எதன் சார்புடையது, அச்சார்புநிலைக்கான காரணங்களைக் கண்டறிதல் அன்றி அறங்கள் சொல்லப்படுவதற்கான சமூகத் தேவையைக் கண்டறிதல் இயலாது. இந்நூல் கடவுள் வாழ்த்தைத் தவிர பிற இடங்களில் சமயக் குறுக்கீடுகள் இல்லை. அரசு அல்லது அதிகாரம் படைத்த சமயம் இவற்றின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லவே இலக்கியம் படைக்கப்படுகின்றன. “உற்பத்தி உறவுகளினடியாக உருவாகும் பொருளாதார அமைப்பே ஒரு சமூகத்தின் அத்திவாரமாய் உள்ளது. அதன்மீது பல்வேறு மேல்தளங்கள் அமைகின்றன. சமூக உறவுகள், கருத்துகள், நிறுவனங்கள், தத்துவங்கள் ஆகியன உருவாகின்றன. பொருளாதார அடித்தளமே, சமூகத்தின் கருத்து வகைகளை அதாவது சமூகத்தினுடைய சிந்தாந்த மேற்கட்டுக்கோப்பை, (அரசியல், சட்ட, சமய, தத்துவார்த்த, கலை இலக்கியக் கருத்துகளை) நிர்ணயிக்கின்றன.4 சமூக உற்பத்தியின் மேல் தளத்தில் இயங்கும் இலக்கியத்திற்கும் தத்துவத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. இது போன்ற அற இலக்கியங்கள் தோன்றுவதற்கான சமூக காரணங்கள் சமூகவியல் மற்றும் மானிடவியல் அறிஞர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தமிழ்ச் சூழலில் இத்தகைய மேலை ஆய்வு முறையில் கீழ்க்கணக்கு நூல்களை ஆய்வு மேற்கொள்ளுதல் வேண்டும்.
                                             II
பதிப்பு வரலாறு
தொல்காப்பியம் (1847) முதலில் அச்சுப் பதிப்பிற்கு வருவதற்கு  3 ஆண்டுகள் முன்பாகவே இனியவை நாற்பது அச்சிடப்பட்டுள்ளது. இனியவை நாற்பது கிடைத்த அச்சுப்பதிப்பில் காலத்தால் பழமையானதாக 1845 ஆம் ஆண்டு  வெளியான பதிப்பைக் கொள்ளலாம். (முகப்பு பக்கத்தில் சங்கச்செய்யுள் என்றே அச்சிடப்பட்டுள்ளது.) இப்பதிப்பினைக் குளத்தூர் சின்னையா முதலியார் உரை செய்து தருக என கேட்க அப்பாச்சியையரால் பதவுரை செய்து முகவை இராமாநு சகவிராயர் அவர்களால் பரிசோதிக்கப்பட்டது. என முகப்புப்பக்கத்தில் குறிப்பு உள்ளது. (உ.வே.சா. நூல்நிலையத்தில் இப்பதிப்பு ஒன்று மிகவும் சிதிலம் அடைந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது அதில் 1844 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.) அதனைத் தொடர்ந்து    1863 ஆம் ஆண்டு மூலமும் உரையுடன் இராயவேலூர் ஆறுமுக முதலியார்  அவர்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இது முதற்பதிப்பு வெளிவந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகே அடுத்த பதிப்பு வருகிறது.  1903 ஆம் ஆண்டு சேதுஸமஸ்தான வித்வான்  ரா.இராகவையங்கார் அவர்களால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் மூலமாக கொண்டுவரப்படுகிறது. 1904ஆம் ஆண்டு  தி.ச.ஆறுமுக நயினார்  அவர்களால் நீதி இலக்கியத் தொகுதியாக வெளிவருகிறது. அதில் இனியவை நாற்பது, மூலபாடமாக பதிப்பிக்கப்பட்டுள்ளது.  ரா.இராகவையங்கார் அவர்களால்  ”மூலமும் பழைய உரையும்”  1905ஆம் ஆண்டு வந்ததாக எஸ்.வையாபுரிப்பிள்ளை இனியவை நாற்பதின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். 1909ஆம் ஆண்டு மஹாவித்வான் கா.இராமசாமி நாயுடு அவர்கள் இயற்றிய விருத்தியுரையுடன் எஸ்.குமாராசாமிப்பிள்ளை அவர்களால் மதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப்படுகிறது.  1922ஆம் ஆண்டு வா. மகாதேவ முதலியார், அவர்களால் கழக வெளியீடாக வெளிவருகிறது. கா.ர.கோவிந்தராஜ முதலியார் அவர்களால் 1926 ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பும்  (இந்தத் தகவல்கள் வையாபுரிப்பிள்ளை பதிப்பில் இருந்து எடுக்கப்பட்டவை), 1928ஆம் ஆண்டு நான்காம் பதிப்பும் மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்படுகின்றன. முதல் இரண்டு பதிப்பும் எந்த ஆண்டு பதிப்பிக்கப்பட்டன என்னும் குறிப்பு கிடைக்கவில்லை. நான்காம் பதிப்பை மட்டுமே கண்ணுற முடிந்தது. பேராசிரியர். எஸ்.வையாபுரிபிள்ளை அவர்களால் 1949ஆம் ஆண்டு இனியவை நாற்பதிற்கு சுவடிகள்  பார்த்துச் செம்பதிப்பாக வெளிவருகிறது. ஆசிரியர் நூற்பதிப்புக் கழகத்தின் மூலம் வெளிவருக்கிறது வா.மகாதேவ முதலியார்  நிறுவன மயமான கழகத்தின் மூலம் 1925,1927, 1945,1948, 1950 ஆகிய ஆண்டுகளில் மறுபதிப்பாக 1950க்கு முன் வந்துள்ளது அதனைத் தொடர்ந்தும் வந்துள்ளன.
பதிப்பின் தேவை
இலக்கிய இலக்கணப் பதிப்புகள் தொடர்ச்சியான மற்றும் தொடர்ச்சியற்ற   வெளியீடுகளுக்கு வரலாற்று நிலையில் மூன்று நிலைகளைக் கொண்டிருக்கின்றன.
1.             எந்த இலக்கியம் மக்களிடம் செல்வாக்குப் பெற்று இருக்கிறதோ அதனுடைய தேவையின்                    அடிப்படையில் மீண்டும் மறுபதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
2.             அதிகாரம் எதனை மக்களிடம் கொண்டு போகவேண்டும் என கருதுகிறதோ அது             தொடர்ச்சியான பதிப்பு வரலாற்றைப் பெற்றிருக்கும். அதிகாரத்திற்கு எதிரானவை             என்றால் அதனைத் தடைசெய்யவும் சட்டத்தால் ஒடுக்கும் முயற்சியில் இயங்கும்.
3.             வணிகநிலை பெரும்பாலும் மேல் சொன்ன இரண்டு காரணங்களைச்  சார்ந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை,  “பிரித்தானிய ஆட்சிக்காலத்திலே உ.வே.சா., சி.வை.தா. போன்றோருக்கு முன்னர் கிறிஸ்தவ மதத் தேவைகளுக்காகவும் பாடசாலைத் தேவைக்களுக்காகவும் அச்சுக் கொண்டுவரப்பட்டது பற்றிய விரிவான வரலாறுண்டு.”5 சங்க நூல்களில் முதன்முதலாக  1812 ஆம் ஆண்டு அச்சேறியது திருக்குறளும் நாலடியாரும் ஆகும். இவை,  இரண்டும் ஒரே நூலாக இணைந்து வருவதோடு மட்டும் அல்லாமல் கீழ்க்கணக்கு நூல்களில் அற இலக்கியமாகும். “கிறிஸ்தவம் பற்றிய கற்பித்தலின்பொழுது தமிழ்நாட்டில் ஏற்கனவே நிலவிய நீதி நூல்களைப் பயன்படுத்தினர் என்பது ஜோன் மொர்டொக் மூலம் தெரிய வருகிறது” 6என சிவத்தம்பி குறிப்பிடுவது எண்ணத்தக்கது. நூல் பதிப்பின் தேவையை நோக்கும் இடத்து, பேராசிரியர் ச.வையாப்புரிபிள்ளை (1949) பதிப்பு முகவுரையில்   “இராமாநுஜ கவிராயர் பதிப்பு ஒன்றே ஏட்டுப் பிரதி நோக்கி அச்சு இயற்றப்பட்டது. செந்தமிழ்ப் பிரசுரமும் (1903), தமிழ்ச் செல்வப் பதிப்பும் (1904) ஸ்ரீ.வை.மு.சடகோபராமாநுஜாச்சாரியார் அனுப்பியுதவிய கையெழுத்துப் பிரதியை ஆதாரமாகக் கொண்டு வெளியிடப்பட்டன. ஆதலால் பிரதிகள் நோக்கிப் பிதிப்பிக்க வேண்டுவது இப்பொழுது இன்றியமையாததாய் முடிந்தது (1949 – ப. v.) எனப் பதிப்பின் தேவையை முன்வைக்கின்றார். பழைய உரையுடன் பதிப்பிக்கப் பெற்றவையாக 1950க்கு முன் இரண்டு பதிப்புகள் வெளிவந்துள்ளன. அவை ரா. இராகவையங்கார் பதிப்பு. (1903),  வையாபுரிப்பிள்ளை பதிப்பு.(1949) {1905 ஆம் ஆண்டு ரா.இராகவையங்கார் இனியது நாற்பது மூலமும் பழைய உரையும்  பதிப்பித்ததாக வையாபுரிப்பிள்ளை தமது பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இப்பதிவினைத் தவிர வேறுபதிவுகள் கிடைக்கவில்லை.}  
மு.ப.
பதிப்பாசிரியர்
நூற்பெயர் / மறு. பதிப்புகள்
1845
இராமாநுஜ கவிராயர்
இனியா நாற்பது 
1863
இராயவேலு ஆறுமுக முதலியார்
இனியவை நாற்பது மூலமும் உரையும்
1903
ரா.இராகவையங்கார்
இனியது நாற்பது மூலமும் உரையும் 
1904
தி.ச.ஆறுமுகநயினார்
இனியவை நாற்பது
1905
ரா.இராகவையங்கார்
இனியது நாற்பது மூலமும் பழைய உரையும் 
1909
எஸ்.குமாரசாமிப்பிள்ளை
இனிது நாற்பது
1922
வா.மகாதேவ முதலியார்
இனியவை நாற்பது  1925, 1927, 1945, 1948, 1950
----
கா.ர.கோவிந்தராஜ முதலியார்
இனிது நாற்பது        1926, 1928
1949
எஸ்.வையாபுரிப்பிள்ளை
இனியவை நாற்பது
சி.வை.தா., உ.வே.சா. ஆகியோரின் சங்க இலக்கியங்களுள் சில நூல்கள் பதிப்பிக்கபட்டதன் பின்பே இனியவை நாற்பது மீண்டும் அச்சுக்கு வருகிறது. மூன்றாம் பதிப்பு வரத்தொடங்கியதில் இருந்து பத்துப் பத்து ஆண்டுகளாகப் பிரித்துப் பார்க்கின்ற போது.
1. 1903, 1904, 1905, 1909. (4 பதிப்புகள்)
2. 1922, 1925, 1926, 1927, 1928. (5 பதிப்புகள்)
   (1925, 1927 வா.மகா. 1928 கா.ர.கோ. மறுபதிப்புகள்)
3. 1930 – 1940 (பதிப்புகள் வரவில்லை)
4.1945, 1949, 1950 (3 பதிப்புகள்).
20ஆம் நூற்றாண்டின் தொடக்க இருபது ஆண்டுகளில் 5 பதிப்புகள் 4 மறுபதிப்புகள் வந்துள்ளன.   30-40 இடைப்பட்ட காலம்; இரண்டாம் உலகப் போர், காகித தட்டுப்பாடு, ஏற்பட்டதினால் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றிலும் ஒரு தேக்கநிலையைக் காணமுடிகிறது. கழகப் பதிப்பைத்தவிர மீதம் உள்ளவை நிறுவனம் சாராத தனிநபர்களால் கொண்டுவரப்பட்டவை. 1903 முதல் 1928 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் வா.மகாதேவ முதலியார், கா.ர.கோவிந்தராச முதலியார் ஆகியோரின் பதிப்புகள் மிக நெருக்கமான இடைவெளியில் அச்சிடப்பட்டுள்ளது.  வா.மகாதேவ முதலியார் பதிப்பினைக் கழகம் வெளியிட்டுள்ளது. கா.ர.கோ. தனிநபராக இருந்து நான்கு முறை பதிப்பித்துள்ளார். இவர் பதிப்புகளின் முகப்புப் பக்கத்தில் சென்னைப் பச்சையப்பன் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் எனக் குறிப்பிடுவதாலும்,  இன்னா நாற்பதின் முகவுரையில் ‘இள மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் எளிமையாக படிக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது’ எனக் குறிப்பைக் கொண்டும் இந்நூல்  அக்கல்லூரியின் பாடத்திட்டத்தில் இருந்திருக்கும் என்பதை நிறுவுகிறது. அதன்பொருட்டு இந்நூல் மறுபதிப்புக் கொண்டுவரவேண்டிய தேவை எழுந்திருக்கலாம். அதுபோல் கழகம், பாடத்திட்டமாக உள்ள நூல்களையே பெரும்பான்மை மறுபதிப்பாகக் கொண்டு வந்துள்ளது. சமூகத்தேவையே பதிப்புகளுக்கும் மறுபதிப்புகளுக்கும் காரணமாக அமைகின்றது.
பதிப்பின் அமைப்பு
இனியவை நாற்பது பல பதிப்புகள் வெளிவந்துள்ள நிலையில் இங்கு ஐந்து பதிப்புகளின் அமைப்பை மட்டும் வகைப்படுத்தப்படுகின்றன. அவை 1903ஆம் ஆண்டு வெளிவந்த ரா.இராகவையங்கார் பதிப்பு, 1909ஆம் ஆண்டு வெளிவந்த தஞ்சை எஸ். குமாரசாமிப் பிள்ளை பதிப்பு, 1922ஆம் ஆண்டு வந்த வா.மகாதேவ முதலியார் பதிப்பு, 1928ஆம் ஆண்டு வந்த கா.ர.கோவிந்தராஜ முதலியார் பதிப்பு, மற்றும் 1949ஆம் ஆண்டு வந்த எஸ்.வையாபுரிப் பிள்ளை பதிப்பு ஆகியவையாகும்.
 ரா.இராகவையங்கார் பதிப்பு (1903)
மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய செந்தமிழ் பிரசுரத்தின் நான்காம் பதிப்பாக ரா.இராகவையங்கார் அவர்களால் இனியவை நாற்பது மூலம் உரையும் 1903ஆம் ஆண்டு வெளியிடப்படுகிறது. முகவுரைப் பகுதியில் மேற்கணக்கு, கீழ்க்கணக்கு வரையறைகளைப் பன்னிருபாட்டியலில் இருந்து எடுத்துக்காட்டி அதில் இனியவை நாற்பது பெறும் இடத்தை அவர் விளக்குகின்றார். பூதஞ்சேந்தனார் பெயர்காரணம் மிகவிரிவாகத் தொல்காப்பிய நூற்பாவானும் உரையாசிரியர்களின் உரையினானும் விளக்கப்பட்டுள்ளது. ஆயினும் காலத்தைப் பற்றிய எந்தக் குறிப்பும் இந்நூலில் இடம்பெறவில்லை. 127 இனிய கருத்துக்களை எடுத்துரைக்கின்றது என்ற பதிவினைக் காணமுடிகிறது. பிரதி பற்றிக் கூறும் போது இது மதுரைத் தமிழ்ச் சங்கத்துக் கையெழுத்துப் புத்தக சாலையில் இருந்தது என்றும் இதனைக் கும்பகோணம் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் ஸ்ரீ உப.வே.வை.மு. சடகோபராமாநுஜாசாரிய ஸ்வாமிகள் அனுப்பியுதவியுள்ளார் என்றும் அப்பிரதியை அவர் ஆராய்ந்து எழுதப்பட்டதனால் அந்நூலைப் பற்றிய கவலை இல்லை என்றும் ரா.இராகவையங்கார் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். இப்பதிப்பில் 41 பாடல்கள் காணப்படுகின்றன. பாடல்கள் புணர்ச்சி ஒழுங்குடன் சந்தி பிரிக்காமல் கொடுக்கப்பட்டுள்ளன. பாடலுக்குக்கீழ் பழைய உரையும் கொடுக்கப்பட்டுள்ளன. செய்யுள் முதற்குறிப்பகராதியும், அருஞ்சொற்பொருளும் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 4+11+2= 17 பக்கங்கள் காணப்படுகின்றன.
தஞ்சை. எஸ்.குமாரசாமிப்பிள்ளை பதிப்பு (1909)
1909ஆம் ஆண்டு வந்துள்ள இப்பதிப்பிற்கு மஹாவித்வான் கா.இராமசாமி நாயுடு அவர்களின் விருத்தியுரையுடன் கூடியது. இது பென்ஷன் சுபேதார்- தஞ்சை.சாம்பசிவம் பிள்ளை அவர்கள் குமாரார் தஞ்சை- எஸ். குமாரசுவாமிப் பிள்ளை அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. இப்பதிப்புப் பெரும்பான்மை முன்னைய பதிப்புகளில் இருந்து வேறுபடுகிறது. அரசினர் கீழ்த்திசை நூலகத்தில் இப்பிரதி உள்ளது. ஆயினும், முகவுரைப் பகுதியும் முதல் பாடலும் சிதிலம் அடைந்து தற்போது இல்லை. தஞ்சை எஸ்.குமாரசாமிப்பிள்ளை பதிப்புகளில் முகவுரை இடம்பெறுதல் இல்லை. [ 1909இல் சிறுபஞ்ச மூலம், 1910இல் நான்மணிக்கடிகை ஆகிய இரு பதிப்புகளிலும் முகவுரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘பாயிரம் அல்லது பனுவல் அன்று’ என்னும் பவனந்தியின் வாக்கு மிகத்தெளிவானது.இவர் பதிப்பித்த நூல்களில் சிறுமுகவுரை இருப்பின் அக்காலகட்டத்தின் பதிப்பு உருவாக்க முயற்சிகளை அறிந்துகொள்ள ஏதுவாய் அமைந்திருக்கும்] முதற்பாடலுக்கான பகுதி உரை மட்டும் கிடைத்துள்ளது. இந்நூலின் உரை; பதவுரை, கருத்துரை, விசேடவுரை என்னும் அமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. நிறுத்தக் குறிகள் முறையாக பயன்படுத்தபட்டுள்ளன. உரைக்கு இறுதியில் பாடல் எண் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள் காட்டப்படவில்லை உரையில் இலக்கண விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இறுதியில் செய்யுள் முதற்குறிப்பகராதி கொடுக்கப்பட்டுள்ளது. மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. (copyright Registered) காப்புரிமை பதிவுசெய்யப்பெற்றது என்றும் விலை அணா 2., என்னும் குறிப்பும் முகப்புப்பக்கத்தில் உள்ளன.  மொத்தம் 34 பக்கங்கள் கொண்டதாக இப்பதிப்பு உள்ளது.
வா.மகாதேவ முதலியார் பதிப்பு (1922)
வா.மகாதேவ முதலியார் பதிப்புக் கழக வெளியீட்டின் வழியாக 1922 ஆண்டு வெளிவருகிறது. முகவுரைப் பகுதியில் முதல், இடை, கடை சங்கம் பற்றியும் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றியும் நானாற்பதில் இனியவை நாற்பது பெறும் இடம்பற்றியும் அதன் பெயர் இலக்கணங்கள், ஆசிரியர் பெயர் காரணம் ஆகியவை பற்றியும் விளக்கபடுகின்றன. இப்பதிப்பில் 41 பாடல்கள் காணப்படுகின்றன. இந்நூற்கு வா.மகாதேவ முதலியார்  உரை எழுதியுள்ளார். பாடலைத் தொடர்ந்து பதவுரையும் மேலும் சில விளக்கங்களும் ஒப்புமைப் பகுதிகள் இலக்கிய மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன.செய்யுள் முதற்குறிப்பகராதி மற்றும் மேற்கோள் காட்டிய நூல்களின் அகரவரிசைபடுத்தி கொடுத்துள்ளார். 34 நூல்களில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளன . முன் இரண்டு பதிப்பைவிட உரை எளிய அமைப்பில் உள்ளது.
கா.ர.கோ பதிப்பு (நான்காம் பதிப்பு -1928)
இன்னா நாற்பதின் முகவுரை பகுதியில் இனியவை நாற்பது பற்றிய குறிப்பைக் கா.ர.கோ எழுதுவதால் அதனை ஒட்டிய காலத்திலே இனியவை நாற்பதையும் பதிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் இனியவை நாற்பது சங்க கால நூல் என்னும் செய்தி அந்த முன்னுரையில் காணப்படுகிறது. இனியவை நாற்பதின் முன்னுரையில் அதன் பெயர் காரணம் மட்டுமே விளக்கப்படுகிறது.  கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 40 பாடல்கள் மட்டுமே இப்பதிப்பில் காணப்படுகிறது. கடவுள் வாழ்த்து முதல் பாடலாக வைத்து எண்ணப்படுகிறது. பாடல்கள் சந்தி பிரிக்காமல் புணர்ச்சி விதியுடன் அமைந்துள்ளன. பாடலைத்  தொடர்ந்து பதவுரை, கருத்துரை, விருத்தியுரை என்னும் அமைப்பில் உரைகள்  அமைந்துள்ளன. விருத்தியுரையில் இலக்கிய இலக்கண மேற்கோள்கள் காணபடுகின்றன. தொல்காப்பியம், புறநானூறு, திருக்குறள், திருவாய்மொழி, கம்பராமாயணம் ஆகிய நூல்களில் இருந்து மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன. சில மேற்கோள்களில் நூற்பெயர்கள் இல்லாமலும் உள்ளன. இறுதியில் செய்யுள் முதற்குறிப்பகராதி கொடுக்கப்பட்டுள்ளது. 50 பக்கங்களில் இப்பனுவல் அமைந்துள்ளது.
எஸ்.வையாபுரிப் பிள்ளை பதிப்பு (1949)
இனியவை நாற்பதிற்கான முதல் மூலபாட திறனாய்வு பதிப்பாக வையாபுரிப் பிள்ளையின் பதிப்புத் திகழ்கிறது. இது விரிவான ஆய்வு முன்னுரை பகுதியைக் கொண்டுள்ளது, இப்பனுவலின் காலநிர்ணயம் மிக நுணுக்கமாகவும், ஆழமாகவும்  ஆராயப்பட்டுள்ளன. முன்னுரையை அடுத்து ஒப்புநோக்கிய அச்சுப் பிரதிகளையும் ஏட்டுப்பிரதிகளயும் தனித்தனியாக காலவரிசைப்படுத்தி வகைபடுத்தியுள்ளார்.  கடவுள் வாழ்த்துடன் சேர்த்து மொத்தம் 41 பாடல்கள் காணப்படுகின்றன. பாடல்கள் முறையாக சந்தி பிரித்து, தேவையான இடங்களில் கால்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி ஆகிய  நிறுத்தக்குறிகள் இப்பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலுக்கு அடியிலும் பழைய உரையும் விளக்க உரையும் கொடுக்கப்பட்டுள்ளன.   பாடல்களில் காணப்படும்  பாடவேறுபாடுகளை அந்தந்தப் பக்கத்தின் கீழ் அடிக்குறிப்புப் பகுதியில் பாடல் எண், சீர் எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. சான்றாக
பிச்சைபுக்கு ஆயினும் கற்றல் மிகஇனிதே
நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்இனிதே
முத்துஏர் முறுவலார் சொல்இனிது; ஆங்குஇனிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு                                    [பாடல் -2]
        2.  5 கற்றவை; 6 கைகொடுத்தல்; 10 முறுவலாய்; 13 தெற்றனவும்
 41 பாடல்களின் உரை முடிவிற்குப் பிறகு ஆராய்ச்சிக் குறிப்புகள் 23 பக்கங்களில்  அமைந்துள்ளன. இவை மிக விரிவாகவும் பல அரிய தகவல்களைத் தகுந்த மேற்கோளைக் கொண்டு விளக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து செய்யுள் முதற்குறிப்பகராதி, தொடர் அடைவு, சொல்-தொடர் அகராதி (சொல்லடைவு), அருஞ்சொற் பொருள் ஆகியவை இணைக்கப்பட்ட பதிப்பாக இது திகழ்கிறது. இது சிறந்த செம்பதிப்பிற்கான அமைப்பைக் கொண்டுள்ளது.
                                   III
 பதிப்புகளில் காணப்படும் பாடல் எண்ணிக்கை வேறுபாடுகள்
இனியவை நாற்பதைப் பொறுத்த அளவில்  பாடல்களில் பெரும் வேறுபாடுகள் இல்லை 40 பாடல்கள் கொண்ட பதிப்பு, 41 பாடல்கள் கொண்ட பதிப்பு என இரண்டு வகை காணப்படுகிறது. 1903, 1922, 1949 ஆகிய மூன்றுபதிப்புகள் 41 பாடல்களுடன் பதிப்பிகப்பட்டுள்ளன. 1909, 1928 ஆகிய இரண்டு பதிப்புகளிலும் 40 பாடல்கள் காணப்பட்டாலும் 1909 பதிப்பில் ‘நட்டார்க்கு’ எனத் தொடங்கும் 18ஆம் பாடல் இல்லை அதுபோல் 1928 பதிப்பில் ‘நட்டார்ப்’ எனத் தொடங்கும் பாடல் காணப்படவில்லை. கா.ர.கோ. பதிப்பில் ‘மன்றின் முழுமக்கள்’ எனத் தொடங்கும் 19ஆம் பாடல் 18ஆம் பாடலாகவும் ‘நட்டார்க்கு’ எனத் தொடங்கும் 18ஆம் பாடல் 19ஆம் பாடலாகவும் காணப்படுகின்றன.  
பாடவேறுபாடும் பதிப்புக் குலவழியும்
பாடவேறுபாட்டு வழியும் உரை அடிப்படையிலும் இரண்டு விதமான குலவழி காணப்படுகின்றன. இவை இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஐந்து பதிப்புக்களின் அடிப்படையில் கிடைத்த முடிகளாகும். அவை:
1. 1903ஆம்ஆண்டில் ரா.இராகவையங்கார் பதிப்பித்த பதிப்பின் அடிப்படையில் 1922ஆம் ஆண்டு வந்த வா.மகாதேவ முதலியார் பதிப்பும்,  1949 ஆம் ஆண்டு வந்த பேரா.எஸ்.வையாபுரிப் பிள்ளை பதிப்பும் பெரும்பான்மை ஒத்து, காணப்படுகின்றன.
2. 1909ஆம் ஆண்டு வந்த தஞ்சை எஸ்.குமாரசாமிப்பிள்ளை பதிப்பும், 1928ஆம் ஆண்டு வந்த கா.ர.கோ. பதிப்பும் ஒன்றாக காணப்படுகின்றன. பாடல்களின் எண்ணிக்கை, உரை அமைப்பு,   மேற்கொண்ட பாடம் ஆகியவை ஒன்றாக காணப்படுகின்றன.
பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை பதிப்பில் கொடுக்கப்பட்ட பாடங்களைத் தொகுத்து அவரின் பதிப்பை அடிப்படையாக வைத்து மற்ற பதிப்பைக் காணும்போது 65 பாடங்களுக்கு 74 பாடவேறுபாடுகள் கிடைத்தன. (காண்க: அட்டவணை-1) வையாபுரிப் பிள்ளை அவர்காலத்திய ஆய்வு முறையை மேற்கண்ட போதும் பாடம் கொடுப்பதில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. உ.வே.சா. பதிப்பில் உடுக்குறி முதலிய குறிகளைப் பயன்படுத்தி பாடவேறுபாடுகள் சுட்டப்பெறும். அடிக்குறிப்பில் பாடபேதம் கொடுக்கப்படும் வழக்கம் உள்ளது.  வையாபுரிப் பிள்ளை பதிப்பிலும் அடிக்குறிப்பில் பாடவேறுபாடுகள் சுட்டப்பட்டுள்ளன. பாடலில் பாடம் எது என எளிதில் விளங்கும் ஆயினும் எந்தச் சுவடி, எந்தப் பதிப்பில் அவர் மேற்கொண்ட பாடம் உள்ளது, என விளங்கிக்கொள்ளுதல் இயலாது. ஆறுமுக நாவலர், சி.வை.தா. போன்றோரின் பதிப்புகளில் பாடபேதம் கொடுக்கும் வழக்கம் காணப்படவில்லை. உ.வே.சா., பவானந்தம் பிள்ளை போன்றோரின் பதிப்பில் பாடபேதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் பேரா. வையாபுரிப் பிள்ளை பதிப்பிலும் பாடவேறுபாடுகள் தரும் முறை காணப்படுகிறது. பாடவேறுபாடுகள் எந்தப் பதிப்பு அல்லது எந்தச் சுவடியில் கிடைத்தன என்னும் குறிப்பு இல்லை. சுத்தப்பதிப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே அவர்களின் நோக்கமாக அமைந்திருந்தது என்பதை அவர்களின் பிற குறிப்புகளில் இருந்து உணரமுடிகின்றன.
கிடைக்கப்பெற்ற பாடவேறுபாடுகளில் 27 பாடவேறுபாடுகள் ஒப்பு நோக்கிய பதிப்புகளில் காணப்படவில்லை. அவை வையாபுரிப்பிள்ளை ஒப்பு நோக்கிய பிற பதிப்புகளிலோ அல்லது ஏட்டுச்சுவடியிலோ இடம்பெற்று இருக்கலாம். 19 பாடங்கள் ஒப்பு நோக்கிய ஐந்து பதிப்புகளிலும் ஒன்றாக உள்ளன. ஆக மீதம் உள்ள 93 பாடங்களில், ஒரு பதிப்பில் மட்டும் இடம்பெறும் பாடங்கள் 15. இரண்டு பதிப்பில் ஒத்து காணப்படும் பாடங்கள் 35. மூன்று பதிப்பில் மட்டும் மேற்கொள்ளும் பாடங்கள் 30. நான்கு பதிப்பில் மட்டும் கொள்ளும் பாடங்கள் 13. (காண்க: அட்டவணை-2.) அட்டவணை-2இல் உள்ள படங்கள் பாடங்கள் ஒத்துபோகிற அமைப்பும் இரண்டு வகையான குலவழிமுறை இருப்பதை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.
  பாடவேறுபாடுகள்
            பழம்நூல்களின் பிரதிகளில் பாடவேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை. தமிழ் இலக்கியங்கள் ஏட்டுச் சுவடிகளில் எழுதப்பட்டவை. ஏடுபடிக்கும் போது தவறாக புரிந்து கொள்வதும், ஏடு எழுதுவோர் தவறாக எழுதிவிடுவதும் உண்டு காலமாற்றத்தால் சமூக மாற்றமும்;  சமூக மாற்றம் இலக்கிய இலக்கணங்களில் பிரதிபலிக்கும் என்னும் இயங்கியல் விதி தமிழுக்கு விதி விலக்கு அன்று.  புதிய இலக்கண அமைவுகள் தோன்றுகிற போது அதனைப் பழம் நூல்களில் இடைசெறுகுவது  சிறுபான்மையாக தமிழில் நடந்தேறியுள்ளது.  பாடங்களைப் பெரும் பிரிவாகப் பிரித்தால் இரண்டு வகையில் அடக்கலாம். அவை, பொருளை வேறுபடுத்தும் பாடம், பொருளை வேறுபடுத்தாத பாடங்கள் ஆகும். வடிவமும் பொருளும் வேறாக அமையும் பாடங்களே பாடவேறுபாட்டாய்வில் மிகுந்த இன்றியமையாதது. வடிவம் வேறாகவும் பொருள் ஒப்புமையாகவும் அமைவது இரண்டாவது வகையாகும். படம்-2  மற்றும் 3, இரண்டு வகையான  குலவழியைக் காட்டுகின்றன.  படம் இரண்டும் மூன்றும்   24 பாடங்களில் நேர் எதிராக மாறுகின்றன. அந்த 24 பாடங்களை மட்டும் பின் வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. 
I. சொற்பொருள் ஒன்றாக அமைந்து வடிவம் வேறாக காணப்படும் பாடவேறுபாடுகள் இவை ஒரு பொருளுக்கு ஏற்ற வேறு சொற்கள் வந்து அமைவதால் இப்பாடவேறுபாடுகள் தோன்றுகின்றன. சான்றாக;
1. தாரணி / தார்புனை (தார் + [ அணி / புனை ] )    (9:2)
2. போர்க்களத்துக் / வெஞ்சமத்துக்             (9:2)
3. மாறா மறமன்னர் / மாறாத மாமன்னர்                (34:4)
அணி, புனை என்னும் சொற்களும் போர்க்களத்து, வெஞ்சமத்துக் என்னும் சொற்களும் மாறா மறமன்னர், மாறாத மாமன்னர் என்னும் சொற்களும் முறையே ஒரே பொருள் கொண்டவை. மாறா என்னும் சொல் ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்; மாறாத என்பது எதிர்மறை பெயரெச்சம் மன்னர் என்னும் பெயருக்கு அடையாக வரும் மற என்னும் பாடமும் மா என்னும் பாடமும் உள்ளன. “இளம்பூரணரே தமது உரையில் ஓரிடத்தில் விழ எழுதினார் போலும் என்று குறிப்பிட்டுள்ளார். பாட மீட்டெடுப்பின் பொழுது இத்தகைய தவறுகள் ஏற்படலாம்”7 ‘ற’,’ர’கரமும் துணைக்காலும் சுவடியில் மயங்கி படிப்பதுண்டு என வையாபுரிப்பிள்ளை  குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது.   
II. இலக்கணப் பொருள் ஒன்று, இலக்கணத்தை உணர்த்தும் வடிவ மாற்றத்தால் தோன்றும் பாடவேறுபாடு.
1. அறஞ் செய்கை / அறஞ் செய்தல்    [7:1]         [ கை, தல் தொழில் பெயர் விகுதிகள்]
   செய் + கை / தல்  செய்கை என்பதும், செய்தல் என்பதும் ஒரே இலக்கண பொருண்மை
2. ஆகல் / ஆதல்                                        [8:4]          [ அல் / தல் தொழில் பெயர் விகுதிகள்]
ஆகு [ஆகுèஆ ] வினையடி + அல் / தல் ஆகல் எனபதும் ஆதல் என்பதும் ஒரே இலக்கண பொருண்மை  
3. தம்கடை[யில்] / தம்கடை[யுள்] [16:3]  [இல், உள் ஆகியவை இடப்பொருள் வேற்றுமை மாறிவந்துள்ளது]
4. அவ்வித்து / ஔவித்து ,   [37:1]                   Allophones
     வவ்வா / வௌவா          [37:4]                     [அவ், ஔவின் மாற்றொலியாகும் ]
(பாடம் இலக்கண வளமையாலும் வரும், இலக்கண வறுமையாலும் வரும் என வ.சுப.மாணிக்கனார் கூறுவார் எனப் பேரா.இ.சுந்தரமூர்த்தி குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது.)
III.  இலக்கணத்தை உணர்த்தும் உருபுகளின் விடுபாட்டால் தோன்றும் பாடவேறுபாடுகள்
1. கார்வரைபோல் / கார்வரை [9:3]
கார்வரைபோல்  என்பதற்கு உரையில் தொடரின் புதை நிலை வடிவமாக ‘கரிய மலைபோலத் தோன்றுகிற யானை’ என 1909, 1928 ஆகிய பதிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது.  கார்வரை
என்பதின் புதைநிலை வடிவமாக கார்வரையைப் போன்ற யானை என 1903, 1922, 1949 ஆகிய பதிப்புகளில்  கொடுக்கப்பட்டுள்ளது.
கார்வரைபோல்             Surface level             கார்வரை
                                                                      Deep Structure
கரிய மலைபோலத் தோன்றுகிற யானை                       கார்வரையைப் போன்ற யானை
இந்நூல் வெண்பா யாப்பால் அமைந்துள்ளதால் பாடம் இயற்சீர்வெண்டளை, வெண்சீர் வெண்டளை ஆகிய இரு சீர்களின் மாற்றத்தால் பாடங்கள் தோன்றியுள்ளன. இவ்வகையான பாடங்கள் அசைகூடுதலாக சேர்வதால் தோன்றுகின்றன. கார்வரைபோல் என்பது காய்ச்சீராகவும், (காய்முன் நேர்) கார்வரை என்பது விளச்சீராகவும் அமைந்துள்ளன. கார்வரைபோல் என்பதில் உவம உருபு வெளிப்படையாகவும், கார்வரை என்பதில் உவம உருபு மறைந்தும் அமைந்துள்ளன. ஆயினும் உரைப்பொருளில் மாற்றங்கள் காணப்படவில்லை.
 2. தளர்நடையைத் / தளர்நடை [15:1]
தளர்நடையைத் என்பதற்கு உரையில் தொடரின் புதைநிலை வடிவமாக மக்களுடைய தளர்ந்த நடையை, காணுதல் இனிது என 1909, 1928 ஆகிய பதிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. தளர்நடை  என்பதின் புதைநிலை வடிவமாக குழவிகள் தளர்நடையைக் காணடல் இனிது என 1903, 1922, 1949 ஆகிய பதிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பாடவேறுபாடு இரண்டாம் வேற்றுமையை விரித்து ஒரு பாடமும் தொகையாக ஒரு பாடமும் கொள்ளப்பட்டுள்ளன. இப்பாடல் வெண்பா யாப்பால் அமைந்துள்ளதால் இவ்விரண்டு பாடமும் காய்முன் நேர் விளமுன் நேர் ஆகிய அமைப்பில் உள்ளதால் தளைத்தட்டவில்லை.
IV. பொருண்மையை வேறுபடுத்தும் பாடவேறுபாடுகள்
 கற்றவை / நற்சவையில் (2:2)
பொருளை வேறுபடுத்தும் பாடங்கள் மிகக் குறைவாகவே அமைந்துள்ளன. பாடல் 2இல் கற்றவை / நற்சவையில் என்னும் இரு வேறு பாடம் நூலின் மூலமாகக் கற்றுக்கொண்ட கல்வி என்னும் வினையாலணையும் பெயராக உள்ளது. நற்சவையில் என்னும் பாடம் நல் என்னும் அடைமொழி சவைஎன்னும் பெயருடன் இணைந்து இல் என்னும் இடப்பொருள் உணர்த்தும் வேற்றுமை ஏற்று கூட்டுநிலை வடிவமாக அமைந்துள்ளது. இவை இரண்டும் பொருண்மை அடிப்படையில் இரண்டு நிலைகளைக் கொண்டு விளங்குகிறது. கற்றவை நல்ல அவையின்கண் கைக்கொடுத்தல் இனிது என்னும் பொருளும். நல்ல அவையில்கண் கற்றவை கைக்கொடுத்தல் இனிது எனவும் உரைகள் பொருள் கொள்கின்றன.
பேராசை / பொலிசை (40:3)
     அச்சுப்பதிப்பில் இடம்பெறாத இரண்டு பாடங்களைப்  பேரா.வையாபுரிப் பிள்ளை மேற்கொள்கிறார். [இனிது/ இனிதே [22:4], பேராசை / பொலிசை (40:3)] இனிது என்னும் பாடத்தை  இனிதே என மாற்றுகிறார்.  இது சுவடி பாடமாக இருக்கலாம்.  ஈற்றில் ஏகாரம் பெற்று முடிவது வெண்பாவின் இலக்கணம் அன்று. ஆயினும், இப்பாடத்தை வையாபுரிப் பிள்ளை தேர்ந்தெடுத்துள்ளார். பொலிசை என்னும் பாடம் சுவடிப்பாடமாகும். இதனைக் கொண்டு மூலபாடத்தை நிறுவுகிறார். இப்பாடம் இந்நூலின் காலத்தைத் தீர்மானிப்பதற்கு மிக மிக இன்றியமையாத பாடமாகக் கருத்தப்படுகிறது. உற்றபேராசை / உற்றபொலிசை இப்பாடத்தைப் பற்றி வையாபுரிப் பிள்ளை (1949) முன்னுரையில் அதன் பொருள்வேறுபாட்டை மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
1845இல் இதன் முதல் பதிப்பு வெளிவந்தது என்றாலும்கூட 1903 ரா. இராகவையங்கார் பதிப்பைத் தொடர்ந்து பலரும் இதனைப் பதிப்பிக்கின்றனர். பாடல் அடிப்படையில், பாடம் மேற்கொள்ளுதல் நிலையிலும் இரண்டு வகையான குலவழிகள் காணப்படுகின்றன. பாடவேறுபாடுகளில் பொருள்மாற்றத்தை ஏற்படுத்துவன மிக குறைவாகவே காணப்படுகின்றன. 150 ஆண்டுகளுக்கு மேலான பதிப்பு வரலாற்றைக் கொண்ட இந்நூல் விரிவாக பல தளங்களில் ஆய்வு செய்யவேண்டிய தேவை உள்ளது. தமிழ்ப்பதிப்பு உருவாக்கம் குறித்து இரண்டுவகையான காரணிகளைச் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவை தமிழ் நாட்டிற்கு வந்த கிறித்துவ பாதரிமார்கள் தங்கள் மதக்கொள்கைகளை விளக்க இங்குள்ள அற இலக்கிய நூலகளைப் பதிப்பிக்கும் முயற்சியில் இரங்குவதும். தென்னிந்திய பார்ப்பணரல்லாதோரின் முக்கியத்துவம் வளரத்தொடங்குவதும் அவர்கள், புலமைத் தளத்தில் இயங்கியதோடு பழம் நூல்பதிப்புப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதிக்குப் பின்னும் 20ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட பகுதிக்குள் தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் வளரத்தொடங்கிய காலம் எனலாம். குறிப்பாக அக்காலப் பகுதியில் இயங்கிய சென்னை மாநிலக்கல்லூரி, சென்னைக் கிறித்துவக்கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னைப் பச்சையப்பன் கல்லூரி,  மதுரைத் தமிழ்ச்சங்கம், கரந்தைத் தமிழ்ச்சங்கம் போன்ற கல்வி நிறுவனங்கள், அந்நிறுவனத்தில் பணியாற்றிய தமிழ் அறிஞர்கள் மாணர்வர்களுக்கென பாடநூல் உருவாக்கமும் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் பெரும்பங்காற்றியுள்ளன. இப்பதிப்புருவாக்க முயற்சியின் பின் இருந்த அரசியல், சமூக, பொருளியல் காரணிகளை அறிந்தால் அன்றித் தமிழ்நூற்பதிப்பு வரலாற்றைச் சரியாக அறிந்துகொள்ளுதல் இயலாது.
                           இனியவை நாற்பது காலவரிசைப் படுத்தப்பட்ட நூலடைவு
1845        மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் அருளிச்செய்த இனியா நாற்பது முகவை இராமாநுச கவிராயரால் பதிப்பிக்கப்பட்டது.
1863        இனியவை நாற்பது இராயவேலூர் ஆறுமுக முதலியார்
*1903     பூதஞ்சேந்தனார் அருளிச்  செய்த இனியது நாற்பது மூலமும் உரையும் பதி. ரா. இராகவையங்கார்  செந்தமிழ் பிரசுரம் தமிழ்ச்சங்கம், முத்திராசாலைப் பதிப்பு மதுரை.
 1904       இனியவை நாற்பது மூலம் தி.ச.ஆறுமுக முதலியார்  தமிழ்ச்செல்வம்; நீதி நூற்றொகை இரண்டாவது பிரிவு.
*1909     பூதஞ்சேந்தனார்  செய்த இனிது நாற்பது மூலமும்  மஹாவித்வான் கா.இராமசாமி நாயுடு அவர்களால் இயற்றப்பட்ட விருத்தியுரையும் தஞ்சை எஸ்.குமாரசுவாமிப்பிள்ளை மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டன. விலை அணா 2.
*1922     இனியவை நாற்பது  உரை வா. மகாதேவ முதலியார், கழகம். சென்னை., 1925,1927, 1945,1948, 1950, 1955, 1960, 1965, 1975, 
*1928     இனியவை நாற்பது (4ஆம் பதிப்பு) கா.ர.கோ. மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம் சென்னை.
*1949     இனியவை நாற்பது  .வையாபுரிப்பிள்ளை  கழகம். சென்னை.
  1967      நானாற்பது மூலமும்  உரையும்   கார்நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது. உரை.                 .மு. வேங்கடசாமி நாட்டார், கழகம் சென்னை.
2005     இன்னா நாற்பது இனியவை நாற்பது, பதி , எஸ் கௌமாரீஸ்வரி சாரதா பதிப்பகம் சென்னை.
                ( உடுக் குறியிடப்பட்ட ஐந்த பதிப்பும் முதன்மை தரவு நூல்களாகும் )
அடிக்குறிப்பு
1. ஆ.வேலுப்பிள்ளை. ப.88
2. கா.சு.பிள்ளை, ப. 281
3. கோ.கேசவன் , முன்னுரை கலாநிதி க.கைலாசபதி,  ப.6.)
4. மேலது  ப.12.)
5. கார்த்திகேசு சிவத்தம்பி 10.
6. மேலது ப.18
7. மேலது,ப.34
  *The commentator on virasoliyam (p.52) mentions this work first and then only iniyavai-narpadu and in manuscripts also the same order is abserved. Brahma worship in temples is mentioned in the
 invocatory stanza. This and the work polisai (st.40) and kudar (st.12) betray the lateness of the work pudan-jendanar is the author and the date of the work may be about A.D. 825. S.Vaiyapurai pillai  p.67.  
சான்று நூல்கள்:
1. கா.சுப்பிரமணியப் பிள்ளை தமிழ் இலக்கியவரலாறு  1936
2.ஆ.வேலுப்பிள்ளை தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்    
  3. கோ.கேசவன் மண்ணும் மனித உறவுகளும், சரவண பாலு பதிப்பகம்,  2001, ப.6.)
 4.கார்த்திகேசு சிவத்தம்பி தமிழ்நூற் பதிப்பு பணியில் உ.வே.சா. பாடவிமர்சனவியல் நோக்கு, குமரன்        புத்தக இல்லம் கொழும்பு- சென்னை., 2007.
5. S.Vaiyapuri pillai History of Tamil Language and literature [From the Beginning to 1000 A.D.] NCBH,1988.

No comments:

Powered By Blogger

Followers

About Me

My photo
Sirkazhi, Tamil Nadu, India
தமிழியல் ஆய்வாளர்