Saturday, June 6, 2020


கீழடி அகழாய்வும் தமிழர் பண்பாடும்

உலகில் மனிதர்கள் வாழத்தொடங்கிப்  பத்து லச்சம் ஆண்டுகள் ஆகின்றன. ஒற்றைச் செல் உயிரினமான அமிபாவில் இருந்து வளர்ந்த உயிரினம் பன்னெடுங்காலமாகப் பரிணாம வளர்ச்சியின் (evaluation) காரணமாக மனித சமூகமாக உருமாறியுள்ளது. பண்டைய காலத்தில் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பது நம்மால் எளிதில் அறிந்து கொள்ளமுடியாது ஆனால், அறிவியல் வளர்ச்சியின் காரணமாகத் தொன்மை மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றி கண்டறிய முடியும் அத்துறையே தொல்லியல் (Archaeology) துறையாகும்.
உலகில் பல்வேறு உயிரினங்கள் வாழந்தாலும் மனித சமூகம், தான் வாழ்ந்தற்கான அடையாளங்களை விட்டுச்செல்கின்றது.   மனித சமூகம் விட்டுச்சென்ற சான்றுகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.  ஒன்று தொல் மனிதர்களின் இறப்பிடம் (Burial Site).  மற்றொன்று தொல் மனிதர்கள்  வாழிடம் (Habitation Site).   
மனிதனின் தொன்மை நாகரீகத்தை வெளிப்படுத்துவது தொல்லியல் துறையாகும். இந்தியாவில் மத்திய தொல்லியல் துறை  (ASI - Archaeological Survey of India) மற்றும் மாநில தொல்லியல் (State Archaeology) துறை ஆகியவை செயல்படுகின்றன. தமிழகத்தில் பல இடங்களில் இது போன்ற கள ஆய்வுகள் நடந்துள்ளன. தமிழகத் தொல்லியல் துறையும் தமிழகத்தில் பரிக்குளம், பனைக்குளம், பூம்புகார், ஆழகன் குளம், தொண்டி, போன்ற 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வுகள் நிகழ்த்தியுள்ளன.
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகின்ற தமிழர் பண்பாட்டு வரலாற்றுடன் தொடர்புடையது கீழடி அகழாய்வாகும். கீழடி மதுரைக்கு அருகில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.  கீழடி மொத்தம் 110ஏக்கர் நிலப்பரப்பினை உடையது. தற்போது 5ஏக்கரில் மட்டுமே அகழாய்வுகள் நடந்துள்ளன. இதில் GPR எனப்படும் (Ground Penetrating Radar) புவி தொலைவுணர்வு மதிப்பாய்வு, MMS எனப்படும்  (Magneto Meter Survey) காந்த அளவி மதிப்பாய்வு, UAVS (Unmanned Aerial Vehicle Survey) ஆளில்லா வான்வழி வாகன மதிப்பாய்வு போன்ற  புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு 5 கட்டங்களாக அகழாய்வுகள் நடந்துள்ளன. அவை 2014-15, 2015-16, 2016-17ஆகியவை மத்திய தொல்லியல் துறையின் மூலம் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதன்பின் 2016-17, மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில் நான்காம் கட்டம் மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வுகள் தமிழகத் தொல்லியல் துறையின் மூலம் நடைபெற்றது.  
நான்காம் கட்ட அகழாய்வில் 5820 அரும்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இவை பண்டைய பண்பாட்டை வெளிக்கொணரும் வகையில் செங்கற் கட்டுமானங்கள், சுடுமண் உறைக் கிணறுகள், மழை நீர் வடியும் வகையில் விரல்களால் அழுத்தி பள்ளம் இடப்பட்ட அமைப்பைக் கொண்ட கூரை ஓடுகள் போன்றவையாகக் காணப்படுகின்றன. மேலும், அரும்பொருட்களும் விலை உயர்ந்த தங்க அணிகலன் பகுதிகள், உடைந்த பகுதிகள், செப்புப் பொருட்கள், இரும்புக்கருவி பாகங்கள், சுடுமண் சொக்கட்டான் காய்கள், வட்ட செல்கள், சுடுமண் காதணிகள், கண்ணாடி மற்றும் விலை உயர்ந்த மணி கற்கள் (அகேட் சூதுபவளம், ஸ்படிகம்) அக்கால மட்பாண்ட ஓடுகள் (கருப்பு சிவப்பு, கருப்பு, சிவப்பு பூச்சு மட்கலப் பகுதிகள்), ரௌலட்டட் மட்பாண்டங்கள், அரட்டின் ஓடுகள் ஆகியனவும் வெளிக் கொணரப்பட்டன.
பெரும்பாலான மட்பாண்டங்களில் கீறல்களும், குறியீடுகளும், வடிவங்களும் காணப்பட்டன. இவை சுடுவதற்கு முன்பும் பின்பும் பொறிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இவ்வகழாய்வில் கணிசமான எண்ணிக்கையில் (50க்கும் மேற்பட்ட)  தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கல துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இப்பொருட்கள் வாயிலாகக் கீழடிப் பகுதியில் பண்டைய காலத்தில் தமிழர் நாகரிகம் வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்ததும், இப்பகுதி மதுரையின் கிழக்குத் திசை நீட்சியாக விளங்கியிருக்க என்பதும் புலனாகிறது. பானை ஓட்டின் கீறல்களும், குறியீடுகளும் அதனொடு கிடைத்த பிராமி எழுத்துக்களும் கீழடி நாகரீகம் உருவாகிய காலத்தில் மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதனைப் தெளிவாக அறியமுடிகிறது. கீழடியில் மறைந்துள்ள தொல்பொருட்களை வெளிக்கொணர வேண்டியது காலத்தின் தேவை ஆகும். இனி வரும் காலங்களில் தமிழ்ச் சமுதாயத்தில் தொன்மை மிக்க பண்பாட்டுச் செல்வங்களை வெளிக்கொணரும் வகையில் அகழ்வாய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளன.
 



கி.மு. 6-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.1-ஆம் நூற்றாண்டு வரை வளமையான பண்பாடு கொண்ட பகுதியாகக் கீழடி விளங்கியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. தற்போது கிடைக்கப்பெற்றுள்ள சான்றுகளின் மூலம் வைகை நதிக்கரையில் நகரமயமாதல் கி.மு.6-ஆம் நூற்றாண்டிலிருந்து, தொடங்குகிறது என்பது தெளிவாகிறது. இதே காலக்கட்டத்தில்தான் வடஇந்தியாவின் கங்கை சமவெளிப் பகுதியிலும் நகரமயமாதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
கீழடி அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட விலங்குகளின் 70 எலும்புத் துண்டுகளின் மாதிரிகள், அறிவியல் அடிப்படையில் பகுப்பாய்வு செய்வதற்கு புனேவிலுள்ள முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான டெக்கான் கல்லூரிக்கு அனுப்பப்பட்டன. இந்த எலும்புத் துண்டுகள் பகுப்பாய்வின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தப்பட்டதில் இவை திமிலுள்ள காளை, எருமை, வெள்ளாடு, கலைமான், காட்டுப்பன்றி மற்றும் மயில் ஆகிய உயிரினங்களுக்குரியவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் திமிலுள்ள காளை, பசு, எருமை, வெள்ளாடு ஆகிய விலங்கினங்கள் 53 சதவீதம் இடம்பெற்றுள்ளன. எனவே, இவ்விலங்கினங்கள் வேளாண்மைக்கு உறுதுணை செய்யும் வகையில் கால்நடைகளாக வளர்க்கப்பட்டுள்ளன எனக் கருதலாம். ஆகவே கீழடி நாகரீகம் மேய்ச்சலைப் பிரதானமாகக் கொண்ட வேளாண் சமூகம் ஆகும்.
இரண்டாம் கட்ட அகழாய்வில் 13 மீட்டர் நீளமுள்ள மூன்று வரிசை கொண்ட சுவர் ஒன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சுவரில் 38x23x6 அளவு மற்றும் 38x26x6 அளவு கொண்ட இரண்டு விதமான செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. செங்கல்லின் அகலம் மட்டுமே சிறிது மாறுபட்டு இருக்கிறதே தவிர நீளம் மற்றும் தடிமன் ஆகியவை ஒரே அளவில் உள்ளது எனவே தமிழர்கள் கட்டுமானத் தொழிநுட்பத்தைப் பெற்று இருந்தனர் மேலும், கட்டிடக்கலை கணித அறிவின் அடிப்படையில் உருவாகக்கக் கூடியது. இந்தக் கீழடி அகழாய்வின் மூலம் தமிழர்களின் கட்டிடக் கலை மற்றும் கணித அறிவினை வெளிக்கொணரும் வகையில் அமைந்துள்ளது.   
ஆடைகள் நெய்வதற்கான நெசவுத்தொழில் கருவிகள், மருந்து அரைக்கும் கல்லினாலான கருவிகள், தந்தத்தினால் ஆன சீப்பு, குறுகிய வாயுடைய நீர்க்குடுவைகள், பல வண்ண மணிகள், தங்கத்தால் ஆன தாயக்கட்டைகள் போன்ற பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை அந்தக் காலத்தின் நகர நிலையினை எடுத்துக்காட்டுவதுடன் தமிழர் நாகரீகம் தமிழின் தொன்மை, தமிழர் பண்பாட்டு மரபுகள் வணிகத் தொடர்புகள் ஆகியவற்றைச் சேர்த்தே வெளிப்படுத்துகின்றன. தமிழத்தில் ஆகழாய்வுச் செய்யப்பட்ட பகுதிகளில் மிக முக்கியமானதாக விளங்குவது கீழடி அகழாய்வாகும்.




தங்கத்தினால் ஆன தாயம் விளையாடும் காய்கள்
முனைவர் கோ.சதீஸ்
உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை
பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
புத்தூர் - சீர்காழி

Powered By Blogger

Followers

About Me

My photo
Sirkazhi, Tamil Nadu, India
தமிழியல் ஆய்வாளர்