Wednesday, December 2, 2009

Tuesday, December 1, 2009

இருள் (அப்துல் ரகுமான்)

இருள் என்னும் கவிதையில் கவிஞர் அப்துல் ரகுமான் தத்துவ அழகியலோடு கவிதையைப் படைத்துக் காட்டியுள்ளார். இந்தக் கவிதை பித்தன் என்னும் கவிதைத் தொகுப்பில் உள்ளது.
அந்தத் தொகுப்பு முழுவதுமே ஒரு தத்துவ விசாரனை போல் அமைந்துள்ளது.

எல்லோரும்
விளக்கேற்றும் அந்தியில்
பித்தன்
விளக்கை அணைத்தான்.

விளக்கை ஏன்
அணைத்தாய்?
என்று கேட்டேன்.

'பார்ப்பதற்கு' என்றான்

அவன் மேலும் சொன்னான்:

காதலி
வெளிச்சத்தில்
தன்னை
வெளிப்படுத்த மாட்டாள்
கடவுளும் அப்படியே.

இருள்
ஆழமான கவிதை...

ஒளியை முத்தமிடும்
விட்டிலின் சிறகுகள்
எரிந்து போகின்றன.

கூட்டின் இருளில்
தவமிருக்கும்
பட்டாம் பூச்சி
சிறகுகளைப் பெறுகின்றன.

என்று போகும் இந்தக் கவிதை மிக தீட்சன்யமான ஒரு பார்வையை வாசகர்க்கு வழங்குகின்றன. ஒளியைத் தேடிப்போகும் விட்டில் பூச்சி இறந்து போகின்றன. இருளின் கூட்டிற்குள் தவமிருக்கும் பட்டாம் பூச்சி சிறகுகளைப் பெறுகின்றன. என்பது இருளில் மூழ்கி கிடக்கும் இதயங்களுக்கு ஒரு நம்பிக்கையை பெற்றுத்தருகிறது.
அதியமான்.

Saturday, October 10, 2009

உலகத்தமிழ் மாநாடுகள்

உலகத் தமிழ் மாநாடுகள்
உலகத்தமிழ் மாநாடுகள் நடந்த ஆண்டுகள்
1966 கோலாலம்பூர் மலேசியா
1968 சென்னை தமிழ்நாடு
1970 பாரிஸ் பிரான்ஸ்
1974 யாழ்ப்பாணம் இலங்கை
1981 மதுரை தமிழ்நாடு
1987 கோலாலம்பூர் மலேசியா
1989 மொரிசியஸ் மொரிசியஸ்
1995 தஞ்சாவூர் தமிழ்நாடு

Thursday, September 10, 2009

செவ்வியல் பதிப்பு முன்னோடி சி.வை.தாமோதரம் பிள்ளை

சி.வை.தாமோதரம் பிள்ளை
தி.பி. 1863 - 1932
12.09.1832 - 01.01. 1901
சி.வை.தா.விற்கு உரிய சிறப்பை
இப்போதாவது தமிழகம் செய்ய வேண்டும்.


தமிழ்ச் செவ்வியல்நூற் பதிப்பு வரலாற்றில் சி.வை.தா. ஒரு புதிய தடத்தை உருவாக்கியவர்.

ஈழத் தீவின் வடபகுதியில் யாழ்ப்பாண நகரின் அருகிலுள்ள சிறுப்பிட்டி என்னும் சிற்றூரில் வைரவநாதர் - பெருந்தேவியார் என்னும் பெற்றோர்க்குத் தலைமகனாகச் சி.வை. தாமோதரம் பிள்ளை 12.09.1832ஆம் ஆண்டில் பிறந்தார்.
தொடக்கக் கல்வியைத் தம் தந்தையிடம் கற்றார். சுன்னாகம் முத்துக்குமார கவிராயரிடம் தாம் விரும்பியவாறே இலக்கண இலக்கியங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்தார். ஆங்கிலக் கல்வியைக் கற்க விரும்பி, தெல்லிப்பளை அமெரிக்க ஊழியக் கல்லூரியில் பயின்றார். கணிதம், மெய்யியல், வானவியல் முதலிய அறிவியல் துறைகளை வட்டுக்கோட்டைப் பல்கலைக் கல்லூரியில் (Jaffna Seminary) 1844 முதல் 1852 வரை ஒன்பது ஆண்டுகள் பயின்று தலைசிறந்த மாணவராகத் திகழ்ந்தார்.
1852ஆம் ஆண்டு தம் 20ஆம் அகவையில் யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார்.
பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று அவர் நடத்தி வந்த 'தினவர்த்தமானி' என்னும் வார இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் காரணமாக சி.வை.தா. தமிழகத்துக்கு வந்து, சென்னையில் குடியேறினார். அவ்விதழ் கிழமைதோறும் வியாழக்கிழமையில் வெளியாயிற்று. அவ் விதழில் நாட்டு நடப்புகள், இலக்கியம், அறிவியல் போன்ற பல்துறைச் செய்திகள் இடம்பெற்றன. இவ்விதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றியதால் சி.வை.தா.வின் அறிவாற்றலையும் எழுத்தாற்றலையும் தமிழ் உலகம் நன்கு அறிந்துகொண்டது. இதழாசிரியராக இருந்துகொண்டே ஆங்கிலேயர் பலருக்குத் தமிழ் கற்பித்து வந்தார். இவரிடம் தமிழ் கற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பர்னல், சர் வால்டர் எலியட் லூசிங்டன் ஆகியோர் ஆவர்.
இவருடைய தமிழ்ப் புலமையைப் போற்றிய ஆங்கில அரசு இவரைச் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியில் அமர்த்தியது. சென்னைப் பல்கலைக்கழகம் (University of Madras) தொடங்கப்பட்டவுடன் (1857) அப் பல்கலைக்கழகத்தில் இ.க. (B.A.) தேர்வு எழுதிப் பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். சென்னை மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த மலபார் மாவட்டத்தில் உள்ள கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரியிலும் பணியாற்றினார். ஆசிரியப் பணியாற்றிய அவரைச் சென்னை அரசு, வரவு - செலவுக் கணக்குத்துறையில் ஓர் அலுவலராக அமர்த்தியது. அவருடைய அறிவின் திறத்தாலும் உழைப்பாலும் மிக விரைவில் பதவி உயர்வு பெற்று வரவு -செலவுக் கணக்குத் துறையின் தலைமை அலுவலராகப் பொறுப்பேற்றார். 1871ஆம் ஆண்டு சட்டத்தேர்வு எழுதி வெற்றி பெற்று வழக்குரைஞருக்குரிய பி.எல் (B.L.) பட்டமும் பெற்றார். தம் ஐம்பதாவது அகவையில் (1882) அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் புதுக்கோட்டை அரசுப்பகுதியின் நடுவர்களில் ஒருவராக அமர்த்தப்பட்டு நான்காண்டுகள் பணியாற்றினார். புதுக்கோட்டை அரசின் தளவாயாகப் பொறுப் பேற்கும்படி இவரை ஆங்கில அரசு கேட்டுக்கொண்டும் தமிழ் நூல்களை அச்சிடுவதில் இருந்த ஈடுபாட்டின் காரணமாக அதனை ஏற்க மறுத்துவிட்டுக் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள கருப்பூரில் குடியேறினார். அங்கிருந்துகொண்டே ஏடுகள் தேடியதோடு கும்பகோணம் வழக்கு மன்றங்களில் வழக்குரைத்து அதனால் ஈட்டிய வருவாயைக் கொண்டு தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதில் முழுமூச்சாக இறங்கினார்.
பதிப்புப் பணி
1852ஆம் ஆண்டு குமரகுருபர சுவாமிகளின் நீதிநெறி விளக்கம் என்னும் நூலுக்குத் தாமே உரையெழுதி அதனை அச்சிட்டு வெளியிட்டார். அதுதான் அவர் முதன்முதலில் பதிப்பித்த நூலாகும்.
நாவலரைப் போலப் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்க வேண்டும் என்னும் வேட்கை மீதூரப் பெற்றார்.
1868ஆம் ஆண்டில் ஆறுமுக நாவலர் அவர்கள் ஆராய்ந்து கொடுத்த தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரையைச் சி.வை.தா. வெளியிட்டார். சேனாவரையர் உரையை முதன்முதலில் வெளியிட்ட பெருமை சி.வை.தா. அவர்களையே சாரும்.
1881ஆம் ஆண்டு பொன்பற்றிக் காவலனான புத்தமித்திரர் இயற்றிய வீரசோழியத்தைப் பெருந்தேவனார் உரையுடன் சி.வை.தா. முதன்முதலில் பதிப்பித்தார். இப்பதிப்பின் வாயிலாகத் தமிழகத்தில் பலருடைய பாராட்டுகளையும் பெற்றார்.
1882ஆம் ஆண்டில் அரசுபணியில் ஓய்வு பெற்றபிறகு பதிப்புப் பணியில் அவரால் தீவிரமாக ஈடுபட முடிந்தது. வீரசோழியப் பதிப்புக்காக அவர் ஏடுகளைத் தேடியபோது தணிகைப் புராணச் சுவடிகள் சில அவருக்குக் கிடைத்தன. தணிகைப் புராணத்தின் திருத்தமான சுவடி ஒன்று அவரிடம் இருந்ததால் அதனைப் பதிப்பிக்கத் தொடங்கினார்.
1883ஆம் ஆண்டில் திருத்தணிகைப் புராணத்தைப் பதிப்பித்தார். அதே ஆண்டில் சி.வை.தா. இறையனார் அகப்பொருள் என்னும் நூலையும் பதிப்பித்தார். இந்நூலின் உரை வெளியான பின்னரே பாண்டியர்கள் மதுரையில் நிறுவிய மூன்று தமிழ்ச் சங்கங்கள் பற்றியும் அச்சங்கங்களில் வீற்றிருந்த புலவர்கள் பற்றியும் அவர்களால் பாடப்பட்ட நூல்கள் பற்றியும் இரண்டு கடல்கோள்களால் தலைச் சங்கமும், இடைச் சங்கமும் அழிந்தமை பற்றியும் தமிழ் மக்களால் அறியமுடிந்தது. கடல்கோளினால் அழிவுறாத குறுந்தொகை முதலான கடைச் சங்க நூல்களான எட்டுத்தொகை நூல்கள் பற்றிய செய்தி இறையனார் அகப்பொருளுரையின் வாயிலாக உலகிற்குத் தெரியவந்து தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சி
தோன்றுவதற்குக் காரணமாக இப்பதிப்பு அமைந்து எனலாம். தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பினால் அவருக்குப் பொருள் இழப்பு ஏற்பட்டது. இருந்தாலும், பதிப்பு முயற்சியில் அவர் ஊக்கம் குன்றாமல் உழைத்தார். கலித்தொகையைப் பதிப்பிக்க விரும்பி இந்து ஆங்கில நாளேட்டின் வாயிலாக விளம்பரம் செய்து செல்வம் மிக்க பெரியோர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 1887ஆம் ஆண்டு கலித்தொகையினைப் பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்புக்குத் தேவையான பொருளில் பெரும் பகுதியைத் தாமோதரனாரின் நண்பரும் புதுக்கோட்டை அரசின் அமைச்சருமாகத் திகழ்ந்த திரு அ. சேசைய சாத்திரி அவர்கள் கொடுத்து உதவினார் என்று கலித்தொகைப் பதிப்பில் தாமோதரனார் குறிப்பிட்டுள்ளார்.
சங்க நூல்களில் கலித்தொகைதான் முதன்முதலில் (1887) பதிப்பிக்கப்பட்டது. இன்றைக்கு (2009) கலித்தொகை பதிப்பித்து 122 ஆண்டுகள் ஆகின்றன. ‘கற்றறிந்தோர் ஏத்தும் கலி’ என்று புலவர்களால் போற்றப்பட்ட இத்தொகை நூலுக்கு நச்சினார்க்கினியரின் உரையும் கிடைத்துள்ளது. தொகை நூல்களில் விரிவான, விளக்கமான, சுவையான உரையைப் பெற்றிருப்பது கலித்தொகை ஒன்றேயாகும். தமிழ் இலக்கியத்தின் அகப்பொருள் மாட்சியை எடுத்துக்காட்டும் இந்நூல் வெளியானதும் தமிழ் அறிஞர்களிடம் ஒருவிதமான உள்ளக் கிளர்ச்சியை அந்நூல் தோற்றுவித்தது.
1889ஆம் ஆண்டு இலக்கண விளக்கத்தை (குட்டித் தொல்காப்பியம்) பதிப்பித்தார். இந்நூல் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் இயற்றப்பட்டதாயினும் தொல்காப்பியத்தை விளக்கும் நூலாக அமைந்துள்ளதால் இதனைத் தாம் வெளியிட்டதாகத் தாமோதரனார் எழுதுகின்றார்.
1889ஆம் ஆண்டு ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான, தோலா மொழித்தேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட சூளாமணி என்னும் சமண சமயக் காவியத்தைத் சி.வை.தா. பதிப்பித்தார். இப்பதிப்பினை வெளியிடுவதற்கு இரங்கூன் வாழ் தமிழர்கள் பொருளுதவி செய்துள்ளனர்.
1891ஆம் ஆண்டு தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு சி.வை.தா. பதிப்பித்துள்ளார். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையோடு 1847ஆம் ஆண்டு மழைவை மகாலிங்கையரால் வெளியிடப்பட்டது. தமிழ் அன்பர்கள் சி.வை.தா.வை, எழுத்ததிகாரத்தை வெளியிட வேண்டுமென்று வலியுறுத்தியதால் பல்வேறு இடங்களிலிருந்து நச்சினார்க்கினியரின் எழுத்ததிகாரச் சுவடிகளைப் பெற்று மீண்டும் பதிப்பித்து அதனை வெளியிட்டார்.
கலித்தொகையைப் பதிப்பித்த பிறகு எட்டுத்தொகை நூல்கள் முழுவதையும் சி.வை.தா. பதிப்பிக்க விரும்பினார் என்பதனை அவர் எழுதியுள்ள பதிப்புரைகளிலிருந்து அறியமுடிகிறது.
அகநானூற்றைப் பதிப்பிக்கும் முயற்சியை 1897ஆம் ஆண்டு மேற்கொண்டார். தமக்கு உதவியாக இரு தமிழாசிரியர்களை அமர்த்தி அகநானூற்றுப் பாடல்களை ஆராய்ந்துவந்தார்.
அகநானூற்றில் மணிமிடை பவளம் வரை உள்ள 300 பாடல்களை ஆராய்ந்துகொண்டிருந்த நிலையில் அவர் உடல்நலம் மிகவும் குன்றிவிட்டது. எனவே, அகநானூற்றுப் பதிப்பை முற்றுவிக்காமலே 1901ஆம் ஆண்டு சனவரி முதல் நாள் (01.01.1901) காலையில் தம் அறுபத்தொன்பதாம் அகவையில் காலமானார்.
செம்மொழித் தகுதியை நிறுவுவதற்குக் காரணமாக இருக்கும் அடிப்படை நூல்களை அழிவின் வாயிலிருந்து மீட்டெடுத்து உலகிற்கு வழங்கியவர் தாமோதரனார். தொல்காப்பியம், கலித்தொகை, இறையனார் அகப்பொருள் ஆகிய நூல்களை இவர் முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். சிறந்த பதிப்பாசிரியர் என்று இன்று அனைவராலும் கொண்டாடப்படும் உ.வே.சா. சி.வை. தா.விற்கு அடுத்த காலக்கட்டத்தில்தான் பதிப்புத் துறையில் இறங்கியுள்ளார்.
உ.வே.சா.விற்குக் கிடைத்த புகழ் சி.வை.தா.விற்குக் கிடைக்கவில்லை. இது குறித்துப் பண்டிதமணி சி. கணபதி பிள்ளை தொடங்கி இலங்கைத் தமிழ் அறிஞர்கள் பலரும் யாழ்ப்பாணத்தில் பிறந்த குற்றத்திற்காக அவர் தமிழ் நாட்டுத் தமிழ் அறிஞர்களால் ஒதுக்கப்பட்டார் என்று மனம் வருந்துகின்றனர். சி.வை.தா.விற்கு உரிய சிறப்பை இப்போதாவது தமிழகம் செய்ய வேண்டும்.
சி.வை.தா. அவர்களைப் பற்றி உ.வே.சா. பின்வருமாறு கூறுகிறார்: "தமது ஓய்வு நேரத்தைத் தமிழ் ஆராய்ச்சியிற் பெரும்பாலும் செலவிட்டு, வீரசோழியம், தொல்காப்பியச் சொல்லதிகாரம், தொல்காப்பியப் பொருளதிகாரம், கலித்தொகை, இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம் என்பனவற்றின் மூலங்களையும், உரைகளையும் பல ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு பரிசோதித்து முதன்முதலாகப் பதிப்பித்து வெளியிட்டவர் இவரே. இக்காலத்தில் தமிழில் பல துறைகளில் ஆராய்ச்சி செய்வோருக்குப் பெருந் துணையாக இருப்பன இவர் வெளியிட்ட புத்தகங்களாகும். இவருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன்."
சீவக சிந்தாமணி நூலை உ.வே.சா. அவர்கள் 1887இல் வெளியிடுவதற்கு உதவியாக அதன் ஏட்டுப் படிகள் இரண்டினைத் தாமோதரனார் அவருக்குக் கொடுத்து உதவியுள்ளார். ஒரு சமயம் சிந்தாமணியை அச்சிடத் தாள் வாங்கக் காசில்லாமல் உ.வே.சா. மனம் வருந்தியபோது, சி.வை.தா. தனக்குத் தெரிந்த ஒரு தாள் வணிகர் மூலம் கடனில் தாள் ஏற்பாடு செய்துதவினார்.

சான்று:
தமிழ் வளர்த்த சான்றோர்கள், சென்னை 1997
டி. ஏ. இராசரத்தினம் பிள்ளை 'தாமோதரம் பிள்ளை அவர்கள்
சரித்திரம்' (சென்னை, 1934)

சி.வை.தா. பதிப்பித்த நூல்கள்
1852 நீதிநெறி விளக்கம்
1868 தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம்
1881 வீரசோழியம்
1883 இறையனாரகப்பொருள்
1883 தணிகைப் புராணம்
1885 தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம்
1887 கலித்தொகை
1889 இலக்கண விளக்கம்
1889 சூளாமணி
1891 தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
1892 தொல்காப்பியம் சொல்லதிகாரம்

இயற்றிய நூல்கள்
கட்டளைக் கலித்துறை
வசன சூளாமணி
சைவ மகத்துவம்
நட்சத்திரமாலை

பெற்ற பட்டம் : 1875 இராவ்பகதூர் பட்டம், சென்னை அரசு

இளமையில் கல்வி கற்க விரும்பி கிறித்துவ மதத்திற்கு மாறிஅக்காலத்தில் கிறித்துவர்களுக்கே மேலை நாட்டுக் கல்வி கற்கும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. ஆயினும், பிற்காலத்தில் ஆறுமுக நாவலரோடு அவருக்கு ஏற்பட்ட தொடர்பின் காரணமாக மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினார். கிறித்துவராக இருந்தபோது அவருடைய பெயர் சி.எல். டபிள்யூ. கிங்க்சுபரி (University of Madras) என்பதாகும்.
1901ஆம் ஆண்டு தைத் திங்கள் முதல் அவர் விட்டுச்சென்ற தமிழ்ப் பதிப்புப் பணியைத் தமிழகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

[ இக்கட்டுரை ஆக்கத்திற்கு உதவிய என் இளவல்கள் வே அழகுமுத்து, இரா.வெங்கடேசன், வே.பிரகாஷ் ஆகிய தமிழியல் ஆய்வாளருக்கும் இப்பணி நிறைவு வரை ஊக்கம் ஊட்டிய ஆய்வறிஞர் முனைவர் அரணமுறுவல் ஐயா அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி ……. ]
அதியமான்
தமிழியல் ஆய்வாளர்

Saturday, August 22, 2009

இடைக்கால இலக்கியத் தமிழில் நிகழ்ந்த ஒலி மாற்றகள்

INTERNATIONAL CONFERENCE ON DRIVIDIAN LINGUISTICS
          CAS in Annamailai university
August 19-21,2009
 Phonological  Interchanges in Middle Literary Tamil
இடைக்கால இலக்கியத் தமிழில் நிகழ்ந்த ஒலி மாற்றகள்    
                                               அதியமான்
 

[இந்த ஆய்வுக் கட்டுரை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மொழியியல்துறை நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் 21.08.09 அன்று வாசிக்கப்பட்டது. இக்கட்டுரைக்கு நெறிக்காட்டியவர்கள் பேரா.கி.அரங்கன், மொழியியல்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர். மற்றும் பேரா.ச.மனோகரன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை ஆகியவர்கள் என் பேராசியர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Abbreviation பாம்பாட்டிச்சித்தர் (Pa.), இடைக்காட்டுச்சித்தர் (It.), அகப்பேய்ச்சித்தர் (Ak.), குதம்பைச்சித்தர்(Ku), கடுவெளிச்சித்தர் (Ka.), அழுகுணிச்சித்தர் (Az.), கொங்கணச்சித்தர் (Ko.) ஆகிய ஏழு சித்தர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன்  ]
 “டைக்கால இலக்கியத் தமிழில் நிகழ்ந்த ஒலி மாற்றகள்”  என்னும் பொருளில் அமைந்த இந்த ஆய்வுக்கட்டுரை  இடைக்காலத் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட ஒலி மாற்றத்தை விளக்குவதாக அமைகிறது. பேச்சுமொழியில் ஒலி மாற்றம் காணப்படுவது இயல்பானவை  ஆனால், இலக்கியப் படைப்பில் பேச்சு மொழி கலப்பது மிகவும் குறைவு, எனினும் மக்களின் பேச்சு மொழி, சங்க இலக்கியமான கலித்தொகை முதலே தொடங்கிவிடுகிறது எனலாம்(சான்றாக ஏடா கலி.87.90 ஏண்டா என்னும் உலக வழக்கு )1. ஆழ்வார் பாசுரங்களில் பேச்சுவழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்பின்  சித்தர்களின் காலப்பகுதியில் சற்று மிகுதியான அளவில் இலக்கியப் படைப்பில் பதிவாகத் தொடங்கியது என வரையறுக்கலாம். சித்தர் பாடல்களில் காணப்படும் ஒலி மாற்றத்தைக் குறிப்பாக உயிர் ஒலி மாற்றத்தையும் மெய் ஒலி மாற்றத்தையும் வடமொழி ஓலியன்கள் எவ்வகையான தமிழ் மொழி ஒலியனாக மாறுகின்றன என்பதையும் அந்த பேச்சு வழக்குச் சொற்கள் இலக்கிய வழக்கில் இருந்து எவ்வாறு மாற்றம் அடைந்துள்ளன என்பதை இக் கட்டுரைச் சுட்டிச்செல்கிறது. 
            இடைக்காலத்தமிழ் Medieval Tamil 500 A.D. – 1600 A.D.
தமிழ்மொழியை மேலை ஆய்வு நோக்கில் மூன்றாகப் பகுத்து ஆய்வு செய்யப்படுகிறது. அவை,  பண்டையத் தமிழ், இடைக்காலத் தமிழ், தற்காலத் தமிழ் என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. மேலும் இடைக்காலத் தமிழைப் பல்லவர்காலத் தமிழ், சோழர்காலத் தமிழ், நாயக்கர்காலத் தமிழ் என மூன்றாகப் பிரிவாகப் மேலும் பிரிக்கப்படுகிறது2.
பல்லவர் காலத் தமிழ்     [ Early Medieval Tamil 500 A.D – 850 A.D.     ]
சோழர் காலத் தமிழ்       [ Middle Medieval Tamil 850 A.D. –1200 A.D. ]
நாயக்கர் காலத் தமிழ்     [ Later Medieval Tamil 1200 A.D – 1600 A.D. ]
இடைக்காலத் தமிழ்மொழித் தரவுகள் பெரும்பாலும் செய்யுள் வடிவத்தில் உள்ளன.  இலக்கியத்தில்  பெரும்பலும் பேச்சுவழக்குகள் கலப்பதில்லை ஆனால், இடைக்காலத் தமிழில் பேச்சுவழக்குகள் இலக்கியத்தமிழில் பதிவாகத் தொடங்குகின்றன. தற்கால இலக்கியங்களில் அவற்றை மிகுதியாக் காணமுடிகின்றன. வட்டார வழக்குகளை வைத்தே நாவல்கள், சிறுகதைகள் இன்று அடையாளப்படுத்தப்படுகின்றன. தற்கால பேச்சுவழக்கில் காணப்படக் கூடிய பலவகையான மொழிக்கூறுகள் (isoglosses), சித்தர் பாடல்களில் பதிவாகியுள்ளன.  
எழுத்து மொழிக்கும் பேச்சு மொழிக்கும் உள்ள வேறுபாடுகள் அது அடைந்த ஒலிமாற்றங்களை வைத்தே வரையறுக்கின்றனர். டாக்டர் கால்டுவெல், ஜூல்ஸ் பிளாக், பேரா. டி. பரோ, பேரா.வ.அய்.சு., கே.வி. சுப்பையா, எல்.வி.இராமசாமிஐயர், பேரா. மு,சண்முகம்பிள்ளை,        பேரா. பத்திரிராஜ் கிருஷ்ணமூர்த்தி, பேரா. கி.அரங்கன். போன்ற மொழியியல் அறிஞர்கள்  திராவிட மொழிகளில் நிகழ்ந்த ஒலிமாற்றங்கள் ஆய்வுச் செய்து சில விதிகளையும் வரையறுத்துள்ளன.
   இலக்கியப் பனுவலில் பதிவாகியுள்ள பேச்சு வழக்கினைத் தொகுத்து அது எவ்வாறு எழுத்து வழக்கில் இருந்து ஒலிமாற்றம் அடைந்து பேச்சுவழக்காக மறியுள்ளது என்பதை மட்டும் இக்கட்டுரை விளக்கிச் செல்கிறது. குறிப்பாக இடைக்காலத்தில் வாழ்ந்தவர்களாக்க் கருதப்படும் சித்தர்களின்3 பாடல்களில் உள்ள வழக்குச்சொற்கள். இவர்கள் 15ஆம் நூற்றாண்டிற்கும் 18ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட  காலப்பகுதியில் வாழ்ந்தவர்களாகக் கருதப்படுகிறது.  அனைத்துப் பாடல்களும் செய்யுள் வடிவமாக குறிப்பாக சிந்து, கும்மி, தெம்மாங்கு ஆனந்தகளிப்பு, போன்ற நாட்டுப்புறப் பாடல் (Flok songs) வடிவமாக உள்ளன. இவை இடைக்காலப் பகுதிக்கும் தற்காலப் பகுதியின் தொடக்கத்திற்கும் இடைப்பட்ட பகுதியாக உள்ளது.
1. உயிர் ஒலி மாற்றம். 
சொற்கள் ஒலிகயன்களால் ஆனவை, ஒலியன்கள் பொருளுடைய உருபனாக மாற்றுகின்றன. அப்பொருள் சொற்பொருளாகவோ அல்லது இலக்கணப் பொருளாகவோ இருக்கலாம் ஒரு சொல்லுக்கு இந்த இரண்டு பொருளும் இன்றியமையாதது. இதனை நன்னூலார் பொருளையும் (சொற்பொருள் Word Meaning ) தன்னையும் (இலக்கணப்பொருள் Grammatical Meaning) என்ற சொற்களால் சுட்டுகிறார்.  
ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா /இருதிணை ஐம்பல் பொருளையும் தன்னையும்
மூவகை இடத்தும் வழக்கொடு செய்யுளின் / வெளிப்படைக் குறிப்பின் விரிப்பது சொல்லே.            
                                                                                                     
(நன்னூல்.சொல்லதிகாரம் 2 நூற்பா)
ஒலியன்களால் ஆன சொற்களில் பேச்சு வழக்கில் உச்சரிக்கப்படும் போது மாற்றங்கள் ஏற்படுகின்றன அவை உயிர் ஒலிமாற்றமாகவோ அல்லது மெய்யொலி மாற்றமாகவோ அமையும். அடுத்துவரும் ஒலிகளுக்கேற்பவும் வேறுமொழியில் இருந்து கடன்பேறாக வழங்கப்படும் சொற்கள் எந்த மொழியில் வழங்கப்படுகிறதோ அந்த மொழியின் ஒலியன் அமைப்புக்கு ஏற்ப ஒலிகள் மாற்றம் அடையும். முதலில் உயிர்ஒலி மாற்றங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.   
1. அ > எ  கீழ் நடு உயிர் இடை இதழ்விரி முன்னுயிராதல்
                   தசநாடி > தெசநாடி     tacanāṭi > tecanāṭi           Ten vine                    Ak.8:3
தசம்+நாடி [ம்> Φ / ந] (தசம்skt.- பத்து) > தசநாடி
                 #தச > தெச ta>te  /ca
தரிசனம் > தெரிசனை          taricaṉam > tericaṉai                               Pa.81:2
   #தரி >தெரி  dha > dhe /ri
பேச்சுவழக்கில் காணாப்படும் இவ்வகையான ஒலியன் மாற்றங்கள்  சித்தர் பாடல்களில் காணக்கிடைக்கின்றன.  ஒலிமாற்றம் அடைவதற்கான காரணத்தை வரலாற்றுமொழியியல் விளக்கிச் செல்கிறது . மேல் தரவில் காணப்படும் இரண்டு சொற்களில் [த] என்னும் ஒலியன் > [தெ] என மாறியுள்ளது. இதில் அடிப்படையான மாற்றமாக [அ] > [எ] உயிரொலி மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த இரண்டு சொற்களும்  சமஸ்கிருத சொற்களாகும், முதல்நிலையில் (intial sound) அகரஒலியுடன் இணைந்து ஒலிக்கப்படும் த என்னும் ஒலி சமஸ்கிருதத்தில் ஒலிப்புடைய ஒலியாக (voiced sound) ஒலிக்கப்படுகின்றன. இது பேச்சுவழக்கில் ஒலிப்புடைய ஒலியுடன் ஒத்து dha>dhe ஆக மாறியுள்ளது. இவ்விடத்தில் மட்டும் அல்லாமல் பிற இடங்களிலும் பெரும்பான்மையான மாற்றம் ஒலிப்புடைய ஒலிவரும் இடங்களிலே ஒலிமாற்றம் நிகழ்ந்துள்ளதை அறிய முடிகின்றன.
ஜகம்               # ஜ்+அ > செ     செகம்    It.80:4.Az.22:3,Ko.11:1,15:1     
Dhavasam       # Dh+a>Dh+e    தெவசம்   Spoken Form
Dhavam                       “           தெவம்     Spoken Form
Dhasarathan                “           தெசரதன்  (அழகர் கோயில் ஓவியம்*)
Gangaiyemman # G+a >Ge       கெங்கையெம்மன்    “
*நாயக்கர் கால ஆவணத்தை ஆய்வு செய்யும் ஆய்வாளர் கொடுத்தக் குறிப்பு (கோ.உத்திராடம் )
மேலே காட்டப்பட்ட  சொற்கள் பேச்சு வழக்கில் இன்று இவ்வாறு உச்சரிக்கப்படுகின்றன.  வட்டார வழக்கில் மட்டும் இவை வருகின்றன என எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ‘பல சமஸ்கிருதச் சொற்கள் ஒலிப்புடைய மெய்யொலி (voiced consonant)யுடன் தொடங்குகிறது. இவற்றின் முதல் அசையில் அகரம் உண்டு. அச்சொற்கள் தமிழுக்கு வரும்போது அகரம் எகரமாக மாறும்4
2.   [ ஏ > ஆ ]  மாற்றம் இடை இதழ்விரி முன்னுயிர் கீழ் நடு உயிராதல்
சேவல்  > சாவல்           cēval  > cāval             Ko.54:2
வேதனை > வாதனை   vētaṉai > vātaṉai            Ak.71:2
ஏ  → ஆ  / அ
முதல் நிலையில் வரும் ஏகார அதனை அடுத்து வரும் அகர ஒலிக்கேற்ப ஆகரமாக மாறியுள்ளது. இதனை  (Regressive Assimilation) பின்வழி ஒரினமாதலுக்குள் அடக்கலாம்.
          3. ஐ > இ  மாற்றம் கூட்டொலி மேல் இதழ்விரி முன்னுயிர் ஆதல்
உபாதை > உபாதி  upātai > upāti   It.119:1
பேச்சுவழக்கில் இறுதி ஐகார ஒலி இகரமாக மாறி வந்துள்ளது.
ஒலித்துணை உகரம் நிறைதல்
பேச்சுவழக்கில் தனிக் குறிலைத் தொடர்ந்து வரும் மெய்களின் ஈற்றில் உகர வந்து நிறைகின்றது. Cvc,c  என்னும் அசை அமைப்பு பேச்சுவழக்கில் ஒலிக்கப்படும் போது (Cvc,c > cvc,cv)  என்னும் அசை அமைப்பாக மாறுகின்றது. நெடிலைத் தொடர்ந்து வரும் ஒற்றிலும் பேச்சுவழக்கில் ஒலித்துணை உகரம் இணைகின்றது. Cvv,c > cvv,cv என்னும் அசை அமைப்பாக மாறுகின்றது.  

கண்ணு          ko. 68:1
கொல்லு        ka.8:4
கொள்ளு        pa.106:2,it.126:1, ka.23:4
செல்லு          ka.8:2
சொல்லு        ka.8:3
          தள்ளு           ka.23:2
          நாலு            ak.5:1;64:1,3,pa.84:1
          நில்லு           pa.72:3, it. 94:2, ka.8:1
          பண்ணு         it. 89:4
          முள்ளு          ka.23:1
          மொள்ளு       ka.23:3

தனிக்குறிலின் முன் ஒற்று உயிர்வர இரட்டும் என்னும் நன்னூல் விதி இதற்கு முழுவதும் பொருந்தி வருகிறது.  யகர அரையுயிர் எ என்னும் ஒலியாக மாற்றம் பெறுகின்றது.  ய்+அ > எ  semi vowle > e
 யமன் > எமலோகம்   ka.5:4    யார் > ஆர்         அப்பர் தேவாரம்5.45.1 யாருக்கடி என்பது ஆருக்கடி என மாறியுள்ளது அழுகணிச் சித்தர் பாடல், மேலே கட்டப்பட்ட உயிரொலி மாற்றங்கள் சித்தர் பாடல்களில் காணப்படுகின்றன.  
                 
2.  மெய் ஒலி மாற்றம் 
      சொற்களில் காணப்படும் ஒலிகள் பேச்சில் ஏற்படும் விரைவு  காரணமாகவும் சோமபலின் காரணமாகவும் அடுத்து வரும் ஒலிகளுக்கு ஏற்பவும், ஒலிகளை விடுவதும், ஒலிகள் வேறு ஒலிகளாக மாறுவதும் நடக்கின்றன என மொழியியல் அறிஞர்கள் கருதுகின்றனர். சித்தர் பாடல்களில் உயிர் ஒலி மாற்றம் போலவே சில மெய்யொலி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அவற்றை இரண்டாகப் பகுக்கலாம் ஒன்று அண்ண ஒலிகளின் இடைமாற்றம் மற்றொன்று ஒலி உழற்சிநிலை என்பனவாகும்.
அண்ண ஒலிகளின் இடைமாற்றம்
1. பின்னண்ண வெடிப்பொலி இடையண்ண ஒலியாதல், (velar voiceless stop change to Palatal stop)
க் > ய்
பரிகாரம் > பரியாரம்       parikāram > pariyāram   pām.62:3
இங்கு [க்] கா > [ய்] யா பின்னண்ண வெடிப்பொலி இடையண்ண ஒலியாக மாறியுள்ளது. இந்தச் சொல் சமஸ்கிருத சொல்லாகும் பரிகாரம் skt. parihāram இடையில் உள்ள [ கா > hā ] என்னும் ஒலி, ஒலிப்புடைய ஒலியாக உச்சரிக்கப் படுகிறது (fricative sound). ஒலிப்புடைய ஒலிகள் தமிழில் ஒலிமாற்றம் அடைகின்றன என்னும் விதியின் அடிப்படையில் ஹா என்னும் ஒலியே யா என மாறியுள்ளது. புதுக்கோட்டை மதுரை போன்ற தென்மாவட்டங்களில் [க] என்னும் ஒலி [ய]  வாக பேச்சுவழக்கில் மாறியுள்ளது. மகன் > மயென் ( [ha] > [ye] )
வைகாசி > வையாசி
இகல் > இயல் 
அயல் > அசல் அயல் என்னும் சொல் பக்கம் என்னும் பொருள்படும்; அயல் என்னும் சொல்லுக்குப் பதிலாக அசல் என்னும் சொல் தரவிலும் காணப்படுகிறது இன்று வழக்கிலும் காணக்கிடைக்கின்றன (அசலூர் போகாதே, அசலூர் பொண்ணு) இது  தலைகீழ் மாற்றமாக ய என்னும் அரையுயிர் உரசொலியக மாறுகின்றன.  
                       
2. நுனி அண்ண ஒலிப்பிலா அடைப்பொலி இடையண்ண ஒலிப்பிலா அடைப்பொலியதல் Alveolar voiceless stop change to Palatal stop
ற்ற் > ச்ச் 
ய → Φ / ச்ச்
ஆயிற்று  > ஆச்சு   āyiṟṟu  > āccu       Ak.44:2, ko. 40:3, 41:2, 95:4
ஆனது >ஆயிற்று > ஆச்சு

மேராச்சு                        Ko.95:4
உண்டாச்சு                    Pa.67:2
வித்தாச்சு                      Ko.77:4
நயமாச்சு                       Ko.40:3            
            மாய்கையாச்சு                Ko.41:2
            உள்ளபடியாச்சு              Ak.44:2
            ஆச்சுது                         Ko.77:2
           இறந்துபோச்சுதே           Ko.44:4

            இடைக்காலத் தமிழில் இவ்விதிகான சான்றுகள் நிரம்ப கிடைக்கின்றன. இந்த விதியில் எவை முன்னர் நடந்தன என்னும் சர்ச்சையும் நிலவி இருக்கின்றன.  இரட்டை றகர ஒலி இரட்டை சகர ஒலியாக மாறிய பிறகே ‘யி’>Φ கெட்டுப்போய்யிருக்கும் என வரையறுத்தனர்.
Free Variation ஒலி உழற்சிகள்
மொழியியல் விதிகளுக்குள் அடங்காத சில ஒப்புமையுடைய ஒலிகளை ஒலி உழற்நிலை என அழைக்கின்றோம்.
1. ஒலிப்பில பல் ஒலி இடையண்ண ஒலிப்பிலாத் தடை ஒலியாதல் Dental voiceless stop interchange to Palatal stop)
த் > ச் #     வயது > வயசு   vayatu > vayacu     ko.67:4
2. பல்லின மூக்கொலி நுனி அண்ண மூக்கொலியாக ஆதல் ( Dental Nasal interchange to Alveolar Nasal)
ந் > ன்        அநேகம் > அனேகம்  anēkam > aēkam                ko.45:2
    ந்ந் > ஞ்ஞ்    ஐந்நூறு > ஐஞ்ஞூறு  ஐஞ்ஞாறாம்                           ko.37:1 
இரட்டித்த நுனிநா பல் மூக்கொலிகள் இடையண்ண ஒலிகளையடுத்து இடையண்ண மூக்கொலிகளாகின்றன.
3.   நுனி அண்ண மருங்கொலி  பின் நுனி அண்ண தொடர் நாவளை ஒலியாதல்  Back Alveolar continuant Retroflex interchange to Alveolar Lateral
ல்ல் > ள்ள்   மெல்ல > மெள்ள
4. பின் நுனி அண்ண தொடர் நாவளை ஒலி நுனி அண்ண மருங்கொலியாதல் ( Back Alveolar continuant Retroflex interchange to Alveolar Lateral)
ழ் > ல் துழாவி > துலாவி tuāvi > tulāvi   pām.123:5
5. பின் நுனி அண்ண தொடர் நாவளை ஒலி  இடையண்ண ஒலிப்பிலா அடைப்பொலியாதல் ( Back Alveolar continuant Retroflex interchange to Palatal stop)
ள் > ச்    [ { உ}  ஒலித்துணை உகரம் ] 
ஆயுள் > ஆயுசு   āyu > āyucu   koṅ.105:1
ஆகிய மெய்யொலி உழற்சிகள் காணப்படுகின்றன.
3. வடமொழி ஒலி தமிழ் ஒலியன் ஆதல்
வடமொழி ஒலி தமிழ் ஒலி அமைப்பிற்குள் வைத்து ஒலிக்கப்பட்டுள்ளன என்பதையும் இந்த ஆய்வுக் கட்டுரை சான்றுகளுடன் நிறுகிறது.
1. ஜ் > ச் / [அம்]   நிஜம் > நிசம்  Ko.19:4
2. ஷ் > ட் / ச் [ க்,ட்,அம்,ண்,]

நிஷ்களம் > நிட்களம்
நிஷ்டை > நிட்டை    
தோஷம் > தோடம்
                   விஷ்ணு > விட்ணு
                   நிஷ்டூரன்  > நிட்டூரன்

[ sh > # ca ]  ஆமிஷம்>ஆமிசம்
வடமொழி ஒலிகள் கிரந்த எழுத்துக்களில் எழுதாமல் தமிழ் வரிவடிவத்தில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துக்களில் எழுதுவதின் மூலம் அவற்றை ஒலிப்பிலா ஒலியாக உச்சரித்துள்ளனர் என்பது தெளிவாகிறது. 
            
            Conclusion of this paper ஆய்வு முடிவுகள்
  • தமிழ் இலக்கியத்தில் சங்க கால இலக்கியத்தில் இருந்தே பேச்சுவழக்குகள் கலக்க தொடங்கிவிடுகின்றன.
  • இடைக்காலத் தமிழில் உள்ள சித்தர் பாடல்களில் பேச்சுவழக்குகள் காணப்படுகின்றன.
  • ஒலிப்புடைய ஒலிகளே முதல்நிலையாக (initial position )இருந்தாலும் இடையில் (Middle Position) இருந்தாலும்  ஒலிமாற்றம் அடைகின்றன. இதுவே இவ் ஆய்வின் கருதுகோளாக அமைந்து ஆய்வை நிறுவியுள்ளது.
  • பேச்சுவழக்குகள் எழுத்து வடிவில் இடைக்காலத்தில் பதிவாகியுள்ளன.
  • தொடர்ச்சியாக நிகழ்ந்த மாற்றத்தை தொகுத்து பிற திராவிட மொழிகளில் அவை எவ்வாறு மாறியுள்ளன என்பதைக் கண்டறிவது காலத்தின் தேவையாகிறது.
சான்றெண் விளக்கம்
     1. தண்டபானிதேசிகர் உருவாக்கிய சங்க இலக்கியக் களஞ்சியம் ப.219.
             2. சு.சக்திவேல், தமிழ் மொழி வரலாறு, 2003, ப.155
            3. பாம்பாட்டிச்சித்தர் (Pa.), இடைக்காட்டுச்சித்தர் (It.), அகப்பேய்ச்சித்தர் (Ak.),
                 குதம்பைச்சித்தர்(Ku), கடுவெளிச்சித்தர் (Ka.), அழுகுணிச்சித்தர் (Az.), கொங்கணச்சித்தர் (Ko.)
4. சு.சக்திவேல், தமிழ் மொழி வரலாறு 2003, ப. 180
கருவி நூல்கள்
தமிழ்ப்பேரகராதி   சென்னைப் பல்கலைக்கழகம் 1982
அகத்தியலிங்கம்    தமிழ் மொழி அமைப்பியல்.
டாக்டர் பொற்கோ இக்காலத் தமிழ் இலக்கணம்
டாக்டர் சு. சக்திவேல் தமிழ் மொழி வரலாறு. 2003
Caldwell, R. A. Comparative Grammar of Dravidian of South Indian Family of Languages 
Burrow, T & Emeneau,  M.B. A Dravidian Etymological Dictionary  Indian edition 1998.
 Bh.Krishnamurti The Dravidian Languages Cambridge Language Surveys 2003
Prof.T.Burrow, Collected Papers on Dravidian Linguistics Annamalai University,
Annamalai Nagar, S.India. 1968

Wednesday, August 19, 2009

புகைப்படம்


யாம்

கவிதை

பூ

வீட்டிற்குச் செல்லும் வழியில்

நான் பூக்களைப்

பார்க்கும் போதெல்லாம்

உன் முகங்களைப் பார்த்துக் கொள்வேன்

என்று சொன்ன கவிதை

நினைவிருக்கிறதா

Powered By Blogger

Followers

About Me

My photo
Sirkazhi, Tamil Nadu, India
தமிழியல் ஆய்வாளர்