தொல்காப்பியரின்
கற்பியல் கற்பித்தல் நெறி:
தொல்காப்பியப் பொருளியல் கோட்பாட்டு
நெறி மரபு நிலை கருத்தாக்கமும் மொழியியல் அணுகுமுறையும்
(மரபு வழி மற்றும் மொழியியல் நோக்கில் செவ்வியல்
இலக்கணங்களைக் கற்பித்தல் என்னும் கருத்தரங்கில் 2012 நவம்பர் 19-21 வாசித்தளிக்கப்பட்டது,
ஸ்ரீ லெட்சுமி கல்வியல் கல்லூரி, கே.கே.சி. கல்வி வளாகம்,
செயங்கொண்ட சோழபுரம்)
சீகன்பால்க் தொடங்கி எல்லீஸ், கால்டுவெல்,
முதலான அய்ரோப்பிய அறிஞர்களால் தமிழ் மொழியின் அமைப்பு மறுகட்டமைப்புச் செய்யப்பட்ட
காலத்தின் இறுதி பகுதியில் என்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை, பரிதிமால் கலைஞர் போன்றோரின்
முயற்சியும் அக்காலத்தில் நிலவிய தமிழ் புறக்கணிப்பும் தமிழ்ச் செவ்வியல் தகுதி பாட்டை
நிறுவ முயற்சி மேற்கொள்ளப்பட்டன. அதன்பின் தமிழ் அறிஞர்கள் பலரும் செவ்வியல் தகுதிபாடு
குறித்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். பேராசிரியர் ஜார்ஜ் ஹார்டின் கடிதம்
தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த அறிஞர்களை மட்டும் அல்லாமல் பிற நாடுகளில் வாழும்
தமிழ் ஆர்வலர்களையும் பேசவைத்தது. இந்தத் தொடர் கருத்தின் விளைவாக அக்காலகட்டத்தில்
தமிழக அரசின் முன்னெடுப்பாலும் இந்திய அரசால், தமிழ் செவ்வியல் மொழி என அறிவிக்கப்பட்டது.
இந்திய அரசின் அதிகாரப் பூர்வமான நிலைப்பாட்டிற்குப் பின் செவ்வியல் தகுதி குறித்தும்,
தமிழ்ச் செவ்வியல் ஆய்வு குறித்தும், உலகச் செம்மொழிகளின் இலக்கியங்கள் குறித்தும்
கடந்த ஐந்து ஆண்டுகளாக முன்பு இருந்த நிலையைவிட
தற்போதைய விழுக்காடு மிகுதியாக உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்கள் இளம் ஆய்வாளர்கள்
தொடர்ந்து கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு மூலமாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றது. இத்தகைய
போக்குச் செவ்வியல் பற்றிய ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டாலும் வெகுஜன மக்களின் மனதில்
சென்றடையவில்லை.
செவ்வியல்
செவ்வியல்
மொழிகளுக்கு அதன் செவ்வியல் கால எல்லை மாறலாம் ஆனால், குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகாலத்திற்கு
முன் இலக்கியத் தரவுகளைக் கொண்டதாக அதன் தொன்மை இருக்கவேண்டும். உலகில் எட்டு மொழிகளைச்
செவ்வியல் மொழி என உலக அறிஞர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். சீனம், கிரேக்கம், லத்தீன்,
சுமேரியம், ஹீப்ரு, பாரசீகம், சமஸ்கிருதம், தமிழ் ஆகியவை ஆகும். உலகச் செவ்வியல் இலக்கியங்களில்
மொழி வேறுவேறாக இருந்த போதிலும் அதன் பொருண்மை தளம் சில பொது இயல்புகளைக் கொண்டுள்ளன.
கிரேக்கம், லத்தீன் வடமொழி ஆகியவற்றில் தொன்மக் கூறுகளும் தத்துவக் கூறுகளும் மிகுதியாக
உள்ளன. தமிழைப் பொறுத்தவரை சங்கப் பாடல்களில் தொன்மம் மிகக் குறைவாகவே பதிவாகியுள்ளன. காதல் வீரம் என்னும் அகப்புற இலக்கியக் கோட்பாடு
காணப்பட்டாலும் திணை என்னும் பகுப்பும், கவிதையில் இடம் பெறும் உள்ளுறை, இறைச்சி போன்ற
நுட்பமங்கள் செவ்வியல் கூறுகளை வெளிப்படுத்துகின்றன. இவை உலகில் வேறு எங்கும் காணப்படாத
கோட்பாடாகக் கருதப்படுகின்றது. சீனம், கிரேக்கம்,
சுமேரியம், ஹீப்ரு போன்ற மொழிகளில் செவ்வியல் காலத்தில் மொழிக்கான இலக்கண நூல்கள்
காணப்படவில்லை. தத்துவங்கள் தத்துவ உரையாடல்களுமே மிகுதியாக உள்ளன. இந்திய சிந்தனை
மரபில் இரு பெரும் மொழிகளிலும் அதாவது சமஸ்கிருத மொழியிலும், தமிழிலும் சிறப்பான வண்ணனை இலக்கணம் தோன்றி மொழியின் அமைப்பையும்
மொழியின் தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளன. வடமொழியில் பாணினி உருவாக்கிய அஷ்டாத்தியாயி,
தமிழில் தொல்காப்பியர் உருவாக்கிய தொல்காப்பியம் இவற்றுடன் தொடர்ச்சியாக மொழிக்கான
இலக்கண நூல் படைத்தல் உருவாகிக்கொண்டே இருந்துள்ளன. கிடைத்த நூல் அல்லாமல் பல இலக்கணநூல்கள்
மறைந்தும் விட்டன. மயிலை சீனி வேங்கடச்சாமி மறைந்துபோன இலக்கண நூல்கள் என்னும் நூலில்
இவற்றைத் தொகுத்துக் கொடுத்துள்ளார்.
திராவிட மொழிகளும் இலக்கணங்களும்
தமிழ்
மொழியில் மட்டும் அல்லாமல் பிற திராவிட மொழிகளிலும் அந்த மொழியின் அமைப்பை விளக்க
இலக்கண நூல்கள் தோன்றியுள்ளன. எனினும் தொல்காப்பியம் அல்லது தமிழ் மொழியின் இலக்கணம்
போல் பொருள் பற்றிய இலக்கண நூல்கள் தோன்றவில்லை. தொல்காப்பியம் எழுத்து, சொல்,
ஆகியவை மொழியின் அமைப்பை விளக்குகின்றன. பொருளதிகாரம் என்னும் மூன்றாவது பகுதி செவ்வியல்
இலக்கிய மரபுகளைப் புரிந்து கொள்வதற்காவும், சமூக அமைப்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன.
தொல்காப்பியர் பொருளதிகாரத்தை எழுத வேண்டிய தேவை சங்க இலக்கிய அமைப்பே காரணம் ஆகும்.
இப்பகுதி இலக்கணமாக மட்டும் அல்லாமல் சமூக மரபுகளை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன.
சான்றாகப் பெண் கடல் கடந்து செல்லக்கூடாது (1) என்னும் வரையறை தொல்காப்பியப் பொருளதிகாரதில்
பதிவாகியுள்ளது. தமிழ் இலக்கிய மரபைப் பெறுத்த வரை இரு அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்டுள்ளன.
அகப்பொருள் மற்றும் புறப்பொருள் கோட்பாடுகள் இவை இரண்டும் திணை என்னும் பகுப்பிற்குள்
அடக்கலாம். திணைப் பகுப்பில் அகத்திணை மரபு, புறத்திணை மரபு என்றும் மொழி மரபில் உயர் திணை, அஃறிணை என்றும் பகுப்புகள் காணப்படுகின்றன.
தொல்காப்பியப் பொருளதிகாரம்
தொல்காப்பியரின் பொருளதிகாரம் என்பதை பல நிலைகளில்
அணுகலாம் அதனுள் 1. இலக்கியவியல்: (அகம்,
புறம், கூற்று, உள்ளுறை, இறைச்சி), 2. சமூகவியல்
: (பெண், ஆண் மரபு), 3. உளவியல்: (காதால் மிகும் நிலையில் ஆணின் நிலை பெண்ணின் நிலை),
4.அமைப்பியல்: (மொழியின் அமைப்பைக் கோட்பாட்டுநிலையில்
அணுகினாலும், அமைப்பு நிலையில் அணுகினாலும் வெளிப்படுத்தும் பொருள்கள் கிட்டத்தட்ட
ஒன்றாகவே உள்ளன. சங்க இலக்கியகளில் இருந்தே தொல்காப்பியத்தின் இலக்கியவியல் கோட்பாடுகள்
உருவாகியிருக்க வேண்டும். ஏன்னெனின் தரவுகளை வைத்தே இலக்கணம் சொல்ல முடியும். (Viapurippillai
1988:11)2. இந்த ஆய்வரங்கத்தின் மையப்பொருள் கற்றல் கற்பித்தலை அடிப்படையாகக்
கொண்டதால் தமிழகத்தில் கற்பித்தல் சூழலின் வரலாற்றை எண்ணிப் பார்க்கவேண்டியுள்ளது.
கற்பித்தலில் எத்தனையோ அறிவியல் தொழில் நுட்பங்கள் வந்த பிறகும் அவற்றைப் பயன்படுத்த
வேண்டிய கட்டாயத்தில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை. இன்னும் கரும்பலகையிலே பல இளங்கலை,
முதுகலை, தமிழியல் கல்வி நடைபெற்று வருகிறது. கல்வியியலில் கல்வித் தொழில் நுட்பம் என்பது முக்கியமான அமிசமாகும்.
இதில் பயிற்றுவித்தலின் பொழுது பயன்படுத்தும் உபகரணங்கள் பற்றி மாத்திரமல்லாது பயிற்றலுக்கான
ஒரு தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்துக் கொள்வதாலும் முக்கியமான இடம் பெறும். இத்துறையில்
பயிற்றல் தொழில் நுட்பங்கள் பின்வருமாறு திரைப்படங்கள், திரைப்படத்துண்டுகள், வானொலி,
தொலைக்காட்சி, வரையறுக்கப்பட்ட சுற்றுள்ள தொலைக்காட்சி பயிற்றும் இயந்திரம் (Close
- Cricuit), நிரல் நிலைப்படுத்தப்பட்ட பயிற்றலும் (Programmed instruction), படங்காட்டி
(Projector), ஒலிப்பதிகைப் பொறி (audio tape recorder), கணினி உதவியிடன் மேற்கொள்ளப்பெறும்
பயிற்றல் (Computer aided language teraching)
(சிவத்தம்பி 2006:54) மனிதனின் அனைத்து வகையான நடவடிக்கைகளும் பொருளாதரத்தைச்
சார்ந்து இருந்தாலும் கல்வியும் இந்தியப் பொருளாதாரத்தைச் சார்ந்தது எனச் சப்பைக்
கட்டுவது சொட்டை வாதமாகும். இந்தக் கட்டுரையின் நோக்கம் தொல்காப்பியப் பொருளதிகாரத்தைப்
புரிந்துகொள்ளும் அணுகுமுறையை விளக்குவதாகும். குறிப்பாகத் தொல்காப்பியரின் கற்பியலைச்
சங்க இலக்கியப் பொருள் கோட்பாட்டின் பின்புலத்திலும், மொழியியல் அணுகுமுறையிலும்
கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள் குறித்த விவாதத்தை முன்வைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.
தொல்காப்பியம் அல்லது சங்க இலக்கியப் பொருளிய
மரபை நன்கு அறிதல் அன்றித் தொல்காப்பியக் கற்பியல் கோட்பாட்டை விளக்க முடியாது. தொல்காப்பிய
மொழியின் கூறுகளை விளக்கிய பின்னே பொருண்மைக் கூறுகளை விளக்க முற்படுகிறது. இது மேல்
நிலையில் அடிப்படைக் கற்பித்தலை விளக்குவதாக உள்ளது மேலும், தொல்காப்பியத்தின் ஒவ்வொரு
இயலையும் அணுகும் போது ஓர் இயலின் மையப்பொருள் குறித்துத் தொடக்கத்திலே விளக்கிவிட்டுப்
பின்னர் ஒவ்வொரு கூறினையும் விளக்குவதாகத் தொல்காப்பிய இயல்கள் அமைந்துள்ளன. சான்றாகப்
புணரியல், செய்யுளியல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம் ஆனால் எல்லா இயல்களும் இவ்வமைப்பில்
விளக்கப்படவில்லை. பொருண்மை கோட்பாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு திணைக்கும் ஒரு இயலாகவும்
அகத்திணையின் பிரிவுகளான களவு, கற்பு ஆகியவற்றுக்கும் தனித்தனி இயலாகப் பகுத்து விளக்கப்பட்டுள்ளன.
பொருளதிகாரத்தின் அமைப்பு
பொருளதிகாரம் நான்கு பெரும்பகுதிகளாகப் பிரிக்கலாம்.
அகத்திணையியல், புறத்திணையியல், செய்யுளியல், மரபியல் என்பவை ஆகும். அகத்திணையியல்
பொருண்மைக்கோட்பாட்டின் முதன்மை பகுதியான அக இலக்கியக்கோட்பாட்டை விவரிக்கிறது. அதன்
உட்பகுப்பான களவியலும், கற்பியலும் பொருளியலும் தனித்தனி இயல்களாக விளக்கப்பட்டுள்ளன
மேலும் களவிற்கும் கற்பிற்கும் பொதுவான மெய்ப்பாடுகளைத் தொகுத்து மெய்ப்பாட்டியல் என்னும்
இயலில் விளக்கப்பட்டுள்ளன. புறத்திணை அமைப்புகளை மட்டும் ஓர் இயல் விளக்குகிறது. செய்யுள்
அமைப்பைத் தனியலாகவும் அதில் அடங்கும் உவமை என்னும் பொருண்மைப் பகுதி தனி இயலிலும்
விளக்கப்பட்டுள்ளன. அகத்திணையிலும் புறத்திணையிலும் செய்யுளியலிலும் அடங்காத தமிழகத்தில்
வழங்கி வந்த மரபை மட்டும் தனி இயலாக மரபியல் என்னும் பெயரில் விளக்கப்பட்டுள்ளது.
(காண்க படம் – 1)
கற்பியலைப் புரிந்து கொள்ள வேண்டுமெனின் அகத்திணை
அமைப்பைப் புரிந்து கொள்ளுதல் மிக இன்றியமையாததாகும். புறப்பொருளைப் புரிந்து கொள்ள
வேண்டும் எனினும் அகத்திணையியலை அறிந்து கொள்வது அவசியம் எனத் தொல்காப்பியம் வலியுறுத்தியுள்ளது.
அகத்திணை மருங்கின் அரிலதப உணர்ந்தோர்
புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின் (தொல்.புறத்.1)
அகத்திணை
இடத்து மயக்கம் கெட உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் வகைப்படக் கூறின் என இளம்பூரணரும்
அகத்திணை என்னும் பொருள்கண் பிணக்கற அறிந்தோர் கூறிய புறத்திணையது இலக்கணத்தைக் கூறுபட
ஆராய்ந்து கூறின் என நச்சினார்க்கினியரும் உரை எழுதியுள்ளனர். அகத்திணையின் அமைப்பைத்
தொல்காப்பியர் பின் வருமாறு வடிவமைத்துள்ளார். திணை, பெயர், கூற்று, பிரிவு, எஞ்சிய
திணைகள் (கைக்கிளை, பெருந்திணை) உள்ளுறை ஆகிய ஆறு பெரும்பகுதியை விளக்குவதாக அகத்திணையியல்
அமைந்துள்ளது.3 அகத்திணையியல் களவியல் கற்பியல்
ஆகிய மூன்றிலும் சில பொதுவான தன்மைகள் காணப்படுகின்றன.
கற்பியல் அணுகுவதற்கு முன் தொல்காப்பியர் கற்பியலை
எவ்வாறு வடிவமைத்துள்ளார் என்பதை நோக்க வேண்டும். கற்பின் விளக்கமும் அதனுடன் தொடர்புடைய
கரணம் தொடர்பாக விவரித்துவிட்டு, தலைவன், தலைவி, தோழி, காமக்கிழத்தியர், செவிலி, அறிவர்
ஆகியோர் கூற்று விளக்கப்படுகின்றன. ஊடல், அலர், பிரிவு மற்றும் தலைவன், தலைவி, தோழி ஆகியோர்க்குரிய மரபும்
இயல்பும் விளக்கப்படுகின்றன. வாயில் மரபும் வாயில்களும் விளக்கப்பட்டுள்ளன. இவை முறையான
வரிசையில் அமையாமல் கலந்து முன்னும் பின்னுமாக நூற்பா மாற்றப்பட்டுள்ளதை வெளிப்படுத்துவதாக
அமைந்துள்ளன. இந்த அமைப்பைப் பார்க்கும் போது
தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்திற்குப் பின் நூற்பாக்கள் சிதைந்தும் இடமாற்றமும் விடுபாடும்
இருந்திருக்க வாய்ப்புள்ளதை இந்த இயல் வெளிப்படுத்துகிறது. பார்ப்பார், கூத்தர், பாணன்,
இளையோர் ஆகிய வாயில்கள் பேசும் சூழல் கூற்று என்று குறிப்பிடப்படாமல் உரிய கிளவி என்றும்
உரிய திறம் என்றும் உரை எழுதப்பட்டுள்ளன. களவில் காணப்படாத சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
உதாரணமாக வாயில்கள், காமக்கிழத்தியர் கூற்றைக் கூறலாம்.
உரை நுட்பம்
இளம்பூரணர் உரை எளிமையாக இருந்தாலும் மேலோட்டமாக
அமைந்துள்ளதைப் போன்று தோன்றுகிறது. நச்சினார்க்கினியார் உரையை அணுகும் போதும் மிக
ஆழமாகவும், நுட்பமாகவும் சங்கப் பாடல்களைத் தகுந்த இடத்தில் உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இவர் சங்கப் பாடல்களுக்கு உரை வரைந்த பின்னர் தொல்காப்பியத்திற்கு உரை வரைந்திருக்கலாம்
என்பது இதன்மூலம் பெறப்படுகிறது.
அலர் < களவுக்கும் கற்புக்கும்
> பொது களவினும்
கற்பினும் அலராகும் என்று கூறுதல் வரைவின்று என்றவாறு, தொகுத்துக் கூறல் என்பதனால்
களவும் ஈண்டு ஓதப்பட்டது (இளம்பூரணர்). களவில் கூட்டமின்மையும் கற்பில் பிரிவின்மையும்
பிறக்கும் ஒப்பக்கூறல் என்னும் உத்தி பற்றிக் களவும் உடனோதினார் சூத்திரம் சுருக்குதற்கு
என நச்சினார்க்கினியாரின் உரை விவரிக்கிறது. கற்பெனப் படுவது கரணமொடு புணர (கற்பு.1)
என என்கின்ற எச்சமாதலின் சொல் அளவே எஞ்சி நின்றது. இதனால் கரணம் பிழைக்கில் மரணம் பயக்கும்
(நச்சினார்க்கினியர்). கற்பியல் 20ஆம் நூற்பாவிற்கு உரை மிக நுட்பமானதும் அடுத்தகட்ட
ஆய்விற்கு நகர்த்தக்கூடியதாகவும் உள்ளது. பொருள்பட மொழிதல் கிழவோட் குரித்தே (கற்பி.20)
பணிந்த மொழி தோன்றாது வேறோர் பொருள் பயப்பக் கூறுதல் தலைவிக்கும் உரித்து என்றவாறு
என நச்சினார்க்கினியரின் உரையினை உள்ளுறை இறைச்சி போன்ற குறிப்பு மொழிக்கு இலக்கணமாகக்
கொள்ளலாம்.
அகராதிப் பணி
இளம்பூரணர் மற்றும் நச்சினார்க்கினியர் உரைகளில்
இரு வேறுபட்ட கருத்து இருந்தாலும் இரண்டு உரைகளிலும் காணப்படும் மொழியைக் கையாளும்
முறையில் ஒரு பொதுத்தன்மை காணப்படுகின்றன. உரைகள் பல இடங்களில் அகராதிப் பணியை மேற்கொண்டுள்ளது.
தொல்காப்பியக் கலைச்சொல்லாகம் குறித்தும் இரு உரைகளையும் ஒப்பு நோக்கி ஆய்வுக்கு உட்படுத்தலாம்.
1.இயல் - இலக்கணம் (ந)
2.ஐயர் - முனிவர் (இ)
3.கரணம் - கரணம்
என்பது வதுவைச் சடங்கு (இ)
கரணம் என்பது வேள்விச் சடங்கு (ந)
4.கீழோர் - கீழோராகிய
வேளாண் மாந்தர் (இ)
5.பொருள்பட
மொழிதலாவது - பொய்யாக் கூறாது மெய்யே கூறல்
6.மேலோர்- மேற்குலத்தாராகிய அந்தணர் அரசர் வணிகர்
என்னும் மூன்று வருணத்தார்(இ)
தொல்காப்பியம்
முழுமைக்கும் உரைகளில் இருந்து இது போன்ற ஓர் அகரதி உருவாக்க வேண்டும். சொற்களுக்கான
நேரடிப்பொருள் அல்லாமல் உரையாசிரியர் எவ்வாறு பொருள் கொள்கிறார் என்பதை அறிவதும் தொல்காப்பியப்
புரிதலுக்குப் பயனுள்ள வகையில் அமையும்.
பாடவேறுபாடு
உரையின் காலமும் உரையாசிரியரின் கொள்கையும் வேறுபட்டமையால்
உரைகளின் பொருண்மைநிலையிலும் இரு விதமான உரைகள் காணப்படுகின்றன. அக்காலகட்டம் ஓலைச்சுவடியில்
எழுதப்பட்டமையால் பாடவேறுபாடுகள் தோன்றுவது இயல்பானது. அவற்றைக் களைந்து வாசித்தல்
படிப்பவரின் கடமையாகும். இவ்விதமான பாடவேறுபாடுகளே இருவிதமான கொள்கையை (School of
thoughts ) அல்லது பாடத்தை உருவாக்கி விடுகின்றன. இளம்பூரணரைவிட நச்சினார்க்கினியரின்
பாடங்கள் பல மாறுபாடாக உள்ளன. இன்றையச் சூழலில்
பாடவேறுபாட்டாய்வு மிக முக்கியமானது.
தொடுத்தற்
கண்ணும் - தொடுதற் கண்ணும்
மெய்கொளவருளிப்
- மெய்கொளவருளிய
புணர்வதாகும்
- புரைவதென்ப
அவள்நிலை
உரைத்தல் - வரைநிலை உரைத்தல்
போன்ற
பாட வேறுபாடுகள் காணப்படுகின்றன. தொல்காப்பியத்தில் உள்ள பாடவேறுபாடுகளை மட்டுமே பெரும்
ஆய்வுக்கு உட்பத்தும் அளவிற்கு உள்ளன.
கூற்று அமைப்பு
கூற்று அகத்திணையிலிலும், களவியலிலும், கற்பியலிலும்
காணப்பட்டாலும் ஒவ்வொரு இயலிலும் கூற்றின் பொருண்மை மட்டும் அல்லாது அதன் அமைப்பிலும்
மாற்றங்கள் காணப்படுகின்றன. கற்பியலின் அமைப்பை அணுகுகிய நிலையைப் போல் ஒவ்வொரு கூற்றையும்
பிரித்துப் பார்க்கும் போது முதல் சில கூற்றுகளின் பொருண்மை ஒன்றாக உள்ளது.
1.களவு காலத்திலிருந்து கற்புக்கு மாறிய நிலை பற்றி
பேசும் சூழல்
2.பிரிவு- பொருள்வயிற் பிரிவு, பரத்தையர் பிரிவு
(ஊடல்)
3.மகவு பிறத்தல் - வாயில்கள் ஊடல் தீர்வு
பெரும்பாலும்
இந்த பொருண்மைக்குளேயே கூற்றுகள் அமைகின்றன. தலைவனின் கூற்றே கற்பியலில் மிகுதியாகவுள்ளன.
தலைவன் கூற்று 33, தலைவிக் கூற்று 19, தோழிக்கூற்று 19. தலைவன் தலைக்கும் காமக்கிழத்திக்கும்
ஊடல் தீர்ப்பவனாக உள்ளான். தலைவியின் குழந்தையைக் காமக்கிழத்தியர் எடுத்துக் கொஞ்சி
மகிழ்கின்றனர். அதனை அறிந்த தலைவி அவளும் உனக்கு தாய் என்று கூறும் கூற்று சங்க கால
சமூக அமைபைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
சிக்கல்கள்
தொல்காப்பிய உரையாசிரியர்கள் தத்தமக்கு உரிய பாடத்திற்கு
ஏற்ப பொருள் வேறுபடுகின்றன. சான்றாக. 1. கற்பியல் கூத்தர் உரிய கிளவி கூறுமிடத்து இளம்பூரணர்
முழுவதும் (1-8) தலைவிக்கு கூறுவது போலவும், நச்சினார்க்கினியர் தலைவிக்கும் (1-4)
தலைவனுக்கும் (5-8) கூறுவது போல் உரை அமைத்துள்ளார்4. 2.களவிற்கும் கற்பிற்கும்
அலர் பொதுவெனில்5 உள்ளுறை போல அகத்திணையில் வைத்திருக்கலாம். களவில் அலர்
ஏற்படில் அதன் முடிவு நன்மையாக இருக்கும், கற்பில் அலர் ஏற்படின் அதன் முடிவு தீமையாக
இருக்க வேண்டும். ஆனால், தொல்காப்பியர் காலத்தில் பொண்களுக்கான சமூக அழுத்தம் காரணமாகத்
தலைவனின் பரத்தையர் பிரிவு ஏற்றுக் கொள்ளவேண்டிய சூழலில் ஆக்கப்படுகிறாள். அதே நிலையில்
ஆணையும் சான்றோர் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்கள் என தோழியின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
3.இளம்பூரணர் உரையில் சில இடங்களில் விலகிப் பொருள் உரைக்காமல் சென்றுவிடுகிறார். சூத்திரத்தான் பொருள் விளங்கும் (கற்பு.நூ.15,
17, 19, 29, 51, 53 ), உதாரணம் வந்த வழி கண்டுகொள்க
(கற்பு நூ.42), வல்லாரைக் கொண்டு உணர்க என உரை வரைந்துள்ளார். மரபிலக்கணத்தின் நுட்பமான
அறிவு மரபை விளங்கிக்கொள்ள பயன்படுகிறது. கருத்தமைப்பின் புலப்பாட்டிற்கு மொழியில்
துணை அவசியமாக அமைகிறது. ஆகவே, இதுபோன்ற ஆய்வுகளில் கற்பித்தலுக்கும் எளிமையான புரிதலுக்கும்
தமிழ் மரபிலக்கணத்துடன் மொழியியல் அணுகுமுறை மிக இன்றியமையாததாக அமைகிறது.
அடிக்குறிப்பு
1. முந்நீர்
வழக்கம் மகடூஉ வோடில்லை (தொல்.அகத்.35)
2.Tolkappiyar
was its first literay output. This accords well with the fact that its author
used the word orai (ஓரை) Sanskrit Hora which is a Greek word borrowed in
Sanskrit astrological works about third or fouth century A.D. Viapurippillai
1988:11
3.திணை 7, அவற்றுள்
4திணைகள் நிலம் பெறும் அன்பின் ஐந்திணைகள் முதல் கரு உரி என்னும் மூன்று பொருள் இன்றியமையாதது
அவற்றுள் முதல் என்பது நிலம் பொழுது என்றும் ஒவ்வொரு நிலத்திற்கும் அடையாளமும் நிலத்
தெய்வத்தையும் விளக்கப்பட்ட பின்னர் பெரும் பொழுது சிறுபொழுது விளக்கப்படுகின்றன(1-12நூ).
கருப்பொருள், உரிப்பொருள் அதனுடன் திணை மயக்கமும் விளக்கப்பட்டுள்ளன. (வையாபுரிப்பிள்ளை
எஸ்., ம.ந.சோமசுந்தரம் பிள்ளை 1934:178)
4.
1.தொல்லவை உரைத்தலும், 2.நுகர்ச்சி ஏத்தல், 3.ஊடலில் தகைத்தல், 4.உறுதி காட்டல்
5.அறிவு மெய்நிறுத்தல், 6.ஏதுவின் உரைத்தல்,
7.துணியக் காட்டல், 8.அளிநிலை உரைத்தல்
5.
களவும் கற்பும் அலர் வரைவின்றே (கற்பு.21) /
அலரில் தோன்றும் காமத்து மிகுதி (கற்பு.22)
படம் - 1
பொருளதிகாரத்தின்
அமைப்பு
|
|||
1.அகத்திணையியல்
|
களவியல்
|
கற்பியல்
|
பொருளியல்
|
|
மெய்ப்பாட்டியல்
|
|
|
2.புறத்திணையியல்
|
|
|
|
3.செய்யுளியல்
|
உவமவியல்
|
|
|
4.மரபியல்
|
|
|
|
துணைநின்ற நூல்கள்
1.சிவத்தம்பி,
கா. 2006 தமிழ் மொழி கற்பித்தலில் உன்னதம், சென்னை, NCBH.
2.சிவலிங்கனார்,
ஆ., தொல்காப்பிய உரைவளம், கற்பியல், சென்னை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.
3.தொல்காப்பியம்
பொருளதிகாரம், 1956 இளம்பூரணர் உரை, சென்னை கழக வெளியீடு
4.வையாபுரிப்பிள்ளை
எஸ்., ம.ந.சோமசுந்தரம் பிள்ளை 1934 தொல்காப்பியப் பொருளதிகாரம்
முதற்பாகம் நச்சினார்க்கினியம், சென்னை, சாது அச்சுக்கூடம்.
முதற்பாகம் நச்சினார்க்கினியம், சென்னை, சாது அச்சுக்கூடம்.
5.Viapurippillai,
S., 1988 History of Tamil Language and Literature Chennai, NCBH
No comments:
Post a Comment