சக்கரவாளக் கோட்டம் என்னும் சம்பாபதி அம்மன் கோவில்
முனைவர் கோ.சதீஸ்பேராசிரியர், தமிழ்த்துறை.அரசு கலைக்கல்லூரி, சீர்காழி arasu.athiyamaan75@gmail.com
பூம்புகார் பகுதியில் சாயாவனம் என்னும் ஊர் உள்ளது. இன்றும் இப்பகுதி இதே பெயரில் வழங்கப்பட்டு வருகின்றது. “ செந்நெலஞ் செறுவின் அன்னந் துஞ்சும் / பூக்கெழு படப்பைச் சாய்க் காட்டன்ன” (நற்.73) என நற்றிணையில் சாய்க்காடு என்று வழங்கப்பட்டுள்ளது. “நெடுங்கதிர்க் கழனித் தண் சாய்க் கானம்” (அகம்.220). என அகநானூற்றில் சாய்க்கானம் என வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருஞானசம்பந்தர் தம் தேவாரத்தில் “தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்” (திருமுறை&2) என சாய்க்காடு என வழங்கப்பட்டுள்ளது. மேலும் “காவிரிப்பூம் பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி” என்றும் கூறுவதால் சாய்க்காடு புகார் நகரத்தின் ஒரு பகுதி என அறியமுடிகிறது. பாரரக்கம் பயில் புகாரின் பல்லவனீச்சரம் (திருமுறை-1) எனத் தேவாரத்தில் பாடியுள்ளார். இவ்வழி சாய்க்காட்டின் தொன்மை கருதின் சிலம்பு கூறும் பிறவாயாக்கைப் பெரியோன் கோயில் இதுவாகத்தான் இருத்தல் வேண்டும் என்கிறார் பூம்புகார் ஆய்வாளர் புலவர் நா.தியாகராசனார் (கு.சக்திவேல், கோ.சதீஸ் 2022:79).
சம்பாபதி அம்மன் கோயில்
சாயாவனப்பகுதிக்கு அருகில் சம்பாபதி கோயில் உள்ளது. இன்று இது சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இது சோழர்களின் குலதெய்வம் என மணிமேகலை கூறுகிறது. சம்பாபதி கோவில் ஒரு சுடுகாட்டுக்கு அருகில் இருந்துள்ளது. இந்தக் கோவிலுக்குக் குஞ்சரக் குடிகை (குச்சரக் குடிகை) என்னும் வேறும் பெயரும் உண்டு. இங்குச் சம்பாபதி தெய்வம் வழிபடப்பட்டது என்னும் கதையும் நிலவுகிறது. சம்பாபதி அம்மனுக்குக் கன்னி, குமரி, முதியாள் என்ற வேறு பல பெயர்களும் உண்டு.
சுடுகாட்டுக்குத் தென்புறத்துச் சுவருக்குத் தென்புறத்தில் (நாளங்காடிக்கு வடக்குப் புறத்தில்) இருந்த உவவனம் என்னும் பௌத்த மடத்துக்கும் சம்பாபதி கோவிலுக்கும் ஒரு வழி இருந்தது. உவவனத்திற்கு மேற்குப் பக்கத்தில் கோட்டைச் சுவரைச் சார்ந்து சிறுவாயில் இருந்தது. அந்த வாயில் வழியாக மேற்குப் பக்கம் சென்றால் சம்பாபதி கோவிலை அடையலாம். உவவனத்துக்குச் சென்ற சுதமதி என்பவள், உவவனத்திலிருந்து இந்த வாயில் வழியாகச் சக்கரவாளக் கோட்டமாகிய சம்பாபதிக் கோவிலுக்கு வந்தாள் என்று ‘மணிமேகலை’ கூறுவதிலிருந்து இதனை அறியலாம்.
‘பெருந்தெரு ஒழித்துப் பெருவனஞ் சூழ்ந்த
திருந்தெயில் குடபால் சிறுபுழைபோகி
மிக்க மாதவர் விரும்பினர் உறையும்
சக்கர வாளக் கோட்டம் புக்காற்
கங்குல் கழியினும் கடுநவை எய்தாது’ என்றும், (சக்கரவாளக்கோட்டம் 21&25)
... .. ... .. ... .. ... .. ... .. பூம்பொழில்
திருந்தெயிற் குடபால் சிறுபுழை போகி
மிக்கமா தெய்வம் வியந்தெடுத் துரைத்த
சக்கர வாளக் கோட்டத் தாங்கட்
பலர்புகத் திறந்த பகுவாய் வாயில்
உலக வறிவியின் ஒருபுடை யிருத்தலும்’ என்றும் மணிமேகலை (துயிலெழுப்பிய காதை 88&93) கூறுவதிலிருந்து பழைய தகவலை அறியமுடிகிறது.
சம்பாபதி கோவிலுக்குச் சுடுகாட்டுக் கோட்டம் என்றும் சக்கர வாளக் கோட்டம் என்றும் வேறு பெயர்கள் இருந்துள்ளது. சுடுகாட்டுக்குப் அருகில் இருந்ததால் சுடுகாட்டுக்கோட்டம் என்று பெயர் வந்தது. ‘இடுபிணக் கோட்டத்து எயிற்புற மாதலிற் /சுடுகாட்டுக்கோட்ட மென்றலது உரையார்’ என்று மணிமேகலை (சக்கரவாளக்கோட்டம் 203&204) கூறுகிறது.
சம்பாபதி கோவிலின் கோபுரவாயிலின் மேலே சக்கரவாளத்தின் சிற்ப உருவம் அமைக்கப்பட்டிருந்ததால், இந்தக் கோவிலுக்குச் சக்கரவாளக்கோட்டம் என்று பெயர் வந்தது என்று ‘மணிமேகலை’ சக்கரவாளக்கோட்ட முரைத்த காதையில் கூறுகிறது.
குஞ்சரக்குடிகை என்னும் சம்பாபதிக் கோவிலிலே இரண்டு செங்கல் தூண்களில் கந்திற்பாவை (கந்து & தூண், பாவை & பதுவை) என்னும் இரண்டு தெய்வங்களின் உருவங்கள் அமைந்திருந்தன. கந்திற்பாவைகளில் ஒன்றுக்குத் துவதிகன் என்றும் மற்றொன்றுக்கு ஓவியச்சேனன் (சித்திரச்சேனன்) என்றும் பெயர். இந்தச் தெய்வப் பாவைகள் கடந்தகால நிகழ்ச்சிகளையும் எதிர்கால நிகழ்ச்சிகளையும் நகரமக்களுக்குத் தெரிவித்ததாக நம்பப்பட்டது. சம்பாபதிக் கோவிலைச் சார்ந்த உலகவறவி என்னும் அம்பலம் இருந்தது. இங்குக் குருடர், செவிடர், முடவர், ஆதரவு இல்லாதார் முதலியவர்களுக்குப் பௌத்த மதத்தார் உடை, உணவு, உறையுள் கொடுத்துப் போற்றினார்கள் என்று மணிமேகலை நூல் கூறுகிறது.
சம்பாபதி தெய்வத்தின் திருவுருவம் ஒன்று, இப்போதைய காவிரிப்பூம்பட்டினத்தின் திருச்சாய்க்காட்டுக் கோவிலில் இருக்கிறது. இந்த உருவம், பிற்காலத்துச் சோழ அரசர் காலத்தில் பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட உருவம். அதே போல் திருவெண்காட்டுக் கோயிலிலும் சோழர்கால செப்புத்திருமேனிகளில் இந்தச் சம்பாபதி அம்மன் சிலையும் செய்யப்படு இன்றும் கோயிலில் உள்ளது. அதனை ஒத்த வடிவங்கள் தமிழகம் முழுவதும் காணப்படுகின்றன. ஆனால் அவை வேறு பெயர்களில் வழங்கப்படுவதைக் காணலாம். செப்புத்திருமேயாய் திருச்சாய்க்காட்டில் உள்ள சம்பாபதி சிலையை முதன்முதலாகப் புகைப்படம் எடுத்தவர் பூம்புகார் ஆய்வாளர் புலவர் நா.தியாகராசனார் ஆவார். அவர் எடுத்த புகைப்படத்தை என்னிடம் கட்டியதை நான் ஒரு படி படம் எடுத்துக் கொண்டேன். அப்படத்தையே இப்பகுதியில் இணைத்துள்ளேன். தமிழகத்தில் இன்று வழங்கும் மாரியம்மன் சிலையும், சம்பாபதி வடிவமும் ஒத்துள்ளதை அறியமுடிகிறது. சம்பாபதி வலது காலை மடித்த நிலையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். பிற்காலத்தில் வடிக்கப்பட்ட மாரியம்மன் சிலைகளில் இடது காலை மடித்து அமர்ந்த கோலத்தில் காட்சித் தரும்படி செய்யப்பட்டுள்ளது. நான்கு கைகள் அதில் வலது கையில் சூலம் உடுக்கையுடனும் இடது கையில் மழுபோன்ற ஆயுதமும் மற்றொரு கையில் கின்னம் போன்று உள்ளது. மேலும் மணிமேகலையில்
வெங்கதிர் வெம்மையின் விரிசிறையிழந்த
சம்பாதி இருந்த சம்பாதி வனமும்
தவாநீர்க் காவிரிப் பாவைதன் தாதை
கவேர னாங்கிருந்த கவேர வனமும்
என்கிறது மணிமேகலை. (மணி.3:53-56). இச்சம்பாபதி அம்மன் கோயில் சாய்க் காட்டுத் திருக்கோயிலின் வடபுறத்தில் அமைந்துள்ளது எனவும், செங்கற்களால் கட்டிய இக்கோயில் இன்று சிதைந்த நிலையில் உள்ளது. தொல்பொருள் ஆய்வின் வழி இக்கோயிலின் கட்டடம் 11,12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது எனக் கணக்கிட்டுள்ளனர் என்கிறார். மணிமேகலையில் இச்சம்பாபதி அம்மன் குறித்த செய்திகள் விரிவாகக் கூறப் பெற்றுள்ளன. பிற்கால சோழர் காலத்தில் இக்கோயில் ஒரு முறை புணரமைக்கப்பட்டிருக்கலாம். ஒரு 1500ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயில் தமிழக அரசால் புணரமைக்கப்படுமா?
No comments:
Post a Comment