சி.வை.தாமோதரம் பிள்ளைதி.பி. 1863 - 1932
12.09.1832 - 01.01. 1901
சி.வை.தா.விற்கு உரிய சிறப்பை
இப்போதாவது தமிழகம் செய்ய வேண்டும்.
தமிழ்ச் செவ்வியல்நூற் பதிப்பு வரலாற்றில் சி.வை.தா. ஒரு புதிய தடத்தை உருவாக்கியவர்.
ஈழத் தீவின் வடபகுதியில் யாழ்ப்பாண நகரின் அருகிலுள்ள சிறுப்பிட்டி என்னும் சிற்றூரில் வைரவநாதர் - பெருந்தேவியார் என்னும் பெற்றோர்க்குத் தலைமகனாகச் சி.வை. தாமோதரம் பிள்ளை 12.09.1832ஆம் ஆண்டில் பிறந்தார்.
தொடக்கக் கல்வியைத் தம் தந்தையிடம் கற்றார். சுன்னாகம் முத்துக்குமார கவிராயரிடம் தாம் விரும்பியவாறே இலக்கண இலக்கியங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்தார். ஆங்கிலக் கல்வியைக் கற்க விரும்பி, தெல்லிப்பளை அமெரிக்க ஊழியக் கல்லூரியில் பயின்றார். கணிதம், மெய்யியல், வானவியல் முதலிய அறிவியல் துறைகளை வட்டுக்கோட்டைப் பல்கலைக் கல்லூரியில் (Jaffna Seminary) 1844 முதல் 1852 வரை ஒன்பது ஆண்டுகள் பயின்று தலைசிறந்த மாணவராகத் திகழ்ந்தார்.
1852ஆம் ஆண்டு தம் 20ஆம் அகவையில் யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார்.
பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று அவர் நடத்தி வந்த 'தினவர்த்தமானி' என்னும் வார இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் காரணமாக சி.வை.தா. தமிழகத்துக்கு வந்து, சென்னையில் குடியேறினார். அவ்விதழ் கிழமைதோறும் வியாழக்கிழமையில் வெளியாயிற்று. அவ் விதழில் நாட்டு நடப்புகள், இலக்கியம், அறிவியல் போன்ற பல்துறைச் செய்திகள் இடம்பெற்றன. இவ்விதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றியதால் சி.வை.தா.வின் அறிவாற்றலையும் எழுத்தாற்றலையும் தமிழ் உலகம் நன்கு அறிந்துகொண்டது. இதழாசிரியராக இருந்துகொண்டே ஆங்கிலேயர் பலருக்குத் தமிழ் கற்பித்து வந்தார். இவரிடம் தமிழ் கற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பர்னல், சர் வால்டர் எலியட் லூசிங்டன் ஆகியோர் ஆவர்.
இவருடைய தமிழ்ப் புலமையைப் போற்றிய ஆங்கில அரசு இவரைச் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியில் அமர்த்தியது. சென்னைப் பல்கலைக்கழகம் (University of Madras) தொடங்கப்பட்டவுடன் (1857) அப் பல்கலைக்கழகத்தில் இ.க. (B.A.) தேர்வு எழுதிப் பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். சென்னை மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த மலபார் மாவட்டத்தில் உள்ள கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரியிலும் பணியாற்றினார். ஆசிரியப் பணியாற்றிய அவரைச் சென்னை அரசு, வரவு - செலவுக் கணக்குத்துறையில் ஓர் அலுவலராக அமர்த்தியது. அவருடைய அறிவின் திறத்தாலும் உழைப்பாலும் மிக விரைவில் பதவி உயர்வு பெற்று வரவு -செலவுக் கணக்குத் துறையின் தலைமை அலுவலராகப் பொறுப்பேற்றார். 1871ஆம் ஆண்டு சட்டத்தேர்வு எழுதி வெற்றி பெற்று வழக்குரைஞருக்குரிய பி.எல் (B.L.) பட்டமும் பெற்றார். தம் ஐம்பதாவது அகவையில் (1882) அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் புதுக்கோட்டை அரசுப்பகுதியின் நடுவர்களில் ஒருவராக அமர்த்தப்பட்டு நான்காண்டுகள் பணியாற்றினார். புதுக்கோட்டை அரசின் தளவாயாகப் பொறுப் பேற்கும்படி இவரை ஆங்கில அரசு கேட்டுக்கொண்டும் தமிழ் நூல்களை அச்சிடுவதில் இருந்த ஈடுபாட்டின் காரணமாக அதனை ஏற்க மறுத்துவிட்டுக் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள கருப்பூரில் குடியேறினார். அங்கிருந்துகொண்டே ஏடுகள் தேடியதோடு கும்பகோணம் வழக்கு மன்றங்களில் வழக்குரைத்து அதனால் ஈட்டிய வருவாயைக் கொண்டு தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதில் முழுமூச்சாக இறங்கினார்.
பதிப்புப் பணி
1852ஆம் ஆண்டு குமரகுருபர சுவாமிகளின் நீதிநெறி விளக்கம் என்னும் நூலுக்குத் தாமே உரையெழுதி அதனை அச்சிட்டு வெளியிட்டார். அதுதான் அவர் முதன்முதலில் பதிப்பித்த நூலாகும்.
நாவலரைப் போலப் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்க வேண்டும் என்னும் வேட்கை மீதூரப் பெற்றார்.
1868ஆம் ஆண்டில் ஆறுமுக நாவலர் அவர்கள் ஆராய்ந்து கொடுத்த தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரையைச் சி.வை.தா. வெளியிட்டார். சேனாவரையர் உரையை முதன்முதலில் வெளியிட்ட பெருமை சி.வை.தா. அவர்களையே சாரும்.
1881ஆம் ஆண்டு பொன்பற்றிக் காவலனான புத்தமித்திரர் இயற்றிய வீரசோழியத்தைப் பெருந்தேவனார் உரையுடன் சி.வை.தா. முதன்முதலில் பதிப்பித்தார். இப்பதிப்பின் வாயிலாகத் தமிழகத்தில் பலருடைய பாராட்டுகளையும் பெற்றார்.
1882ஆம் ஆண்டில் அரசுபணியில் ஓய்வு பெற்றபிறகு பதிப்புப் பணியில் அவரால் தீவிரமாக ஈடுபட முடிந்தது. வீரசோழியப் பதிப்புக்காக அவர் ஏடுகளைத் தேடியபோது தணிகைப் புராணச் சுவடிகள் சில அவருக்குக் கிடைத்தன. தணிகைப் புராணத்தின் திருத்தமான சுவடி ஒன்று அவரிடம் இருந்ததால் அதனைப் பதிப்பிக்கத் தொடங்கினார்.
1883ஆம் ஆண்டில் திருத்தணிகைப் புராணத்தைப் பதிப்பித்தார். அதே ஆண்டில் சி.வை.தா. இறையனார் அகப்பொருள் என்னும் நூலையும் பதிப்பித்தார். இந்நூலின் உரை வெளியான பின்னரே பாண்டியர்கள் மதுரையில் நிறுவிய மூன்று தமிழ்ச் சங்கங்கள் பற்றியும் அச்சங்கங்களில் வீற்றிருந்த புலவர்கள் பற்றியும் அவர்களால் பாடப்பட்ட நூல்கள் பற்றியும் இரண்டு கடல்கோள்களால் தலைச் சங்கமும், இடைச் சங்கமும் அழிந்தமை பற்றியும் தமிழ் மக்களால் அறியமுடிந்தது. கடல்கோளினால் அழிவுறாத குறுந்தொகை முதலான கடைச் சங்க நூல்களான எட்டுத்தொகை நூல்கள் பற்றிய செய்தி இறையனார் அகப்பொருளுரையின் வாயிலாக உலகிற்குத் தெரியவந்து தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சி
தோன்றுவதற்குக் காரணமாக இப்பதிப்பு அமைந்து எனலாம். தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பினால் அவருக்குப் பொருள் இழப்பு ஏற்பட்டது. இருந்தாலும், பதிப்பு முயற்சியில் அவர் ஊக்கம் குன்றாமல் உழைத்தார். கலித்தொகையைப் பதிப்பிக்க விரும்பி இந்து ஆங்கில நாளேட்டின் வாயிலாக விளம்பரம் செய்து செல்வம் மிக்க பெரியோர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 1887ஆம் ஆண்டு கலித்தொகையினைப் பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்புக்குத் தேவையான பொருளில் பெரும் பகுதியைத் தாமோதரனாரின் நண்பரும் புதுக்கோட்டை அரசின் அமைச்சருமாகத் திகழ்ந்த திரு அ. சேசைய சாத்திரி அவர்கள் கொடுத்து உதவினார் என்று கலித்தொகைப் பதிப்பில் தாமோதரனார் குறிப்பிட்டுள்ளார்.
சங்க நூல்களில் கலித்தொகைதான் முதன்முதலில் (1887) பதிப்பிக்கப்பட்டது. இன்றைக்கு (2009) கலித்தொகை பதிப்பித்து 122 ஆண்டுகள் ஆகின்றன. ‘கற்றறிந்தோர் ஏத்தும் கலி’ என்று புலவர்களால் போற்றப்பட்ட இத்தொகை நூலுக்கு நச்சினார்க்கினியரின் உரையும் கிடைத்துள்ளது. தொகை நூல்களில் விரிவான, விளக்கமான, சுவையான உரையைப் பெற்றிருப்பது கலித்தொகை ஒன்றேயாகும். தமிழ் இலக்கியத்தின் அகப்பொருள் மாட்சியை எடுத்துக்காட்டும் இந்நூல் வெளியானதும் தமிழ் அறிஞர்களிடம் ஒருவிதமான உள்ளக் கிளர்ச்சியை அந்நூல் தோற்றுவித்தது.
1889ஆம் ஆண்டு இலக்கண விளக்கத்தை (குட்டித் தொல்காப்பியம்) பதிப்பித்தார். இந்நூல் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் இயற்றப்பட்டதாயினும் தொல்காப்பியத்தை விளக்கும் நூலாக அமைந்துள்ளதால் இதனைத் தாம் வெளியிட்டதாகத் தாமோதரனார் எழுதுகின்றார்.
1889ஆம் ஆண்டு ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான, தோலா மொழித்தேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட சூளாமணி என்னும் சமண சமயக் காவியத்தைத் சி.வை.தா. பதிப்பித்தார். இப்பதிப்பினை வெளியிடுவதற்கு இரங்கூன் வாழ் தமிழர்கள் பொருளுதவி செய்துள்ளனர்.
1891ஆம் ஆண்டு தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு சி.வை.தா. பதிப்பித்துள்ளார். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையோடு 1847ஆம் ஆண்டு மழைவை மகாலிங்கையரால் வெளியிடப்பட்டது. தமிழ் அன்பர்கள் சி.வை.தா.வை, எழுத்ததிகாரத்தை வெளியிட வேண்டுமென்று வலியுறுத்தியதால் பல்வேறு இடங்களிலிருந்து நச்சினார்க்கினியரின் எழுத்ததிகாரச் சுவடிகளைப் பெற்று மீண்டும் பதிப்பித்து அதனை வெளியிட்டார்.
கலித்தொகையைப் பதிப்பித்த பிறகு எட்டுத்தொகை நூல்கள் முழுவதையும் சி.வை.தா. பதிப்பிக்க விரும்பினார் என்பதனை அவர் எழுதியுள்ள பதிப்புரைகளிலிருந்து அறியமுடிகிறது.
அகநானூற்றைப் பதிப்பிக்கும் முயற்சியை 1897ஆம் ஆண்டு மேற்கொண்டார். தமக்கு உதவியாக இரு தமிழாசிரியர்களை அமர்த்தி அகநானூற்றுப் பாடல்களை ஆராய்ந்துவந்தார்.
அகநானூற்றில் மணிமிடை பவளம் வரை உள்ள 300 பாடல்களை ஆராய்ந்துகொண்டிருந்த நிலையில் அவர் உடல்நலம் மிகவும் குன்றிவிட்டது. எனவே, அகநானூற்றுப் பதிப்பை முற்றுவிக்காமலே 1901ஆம் ஆண்டு சனவரி முதல் நாள் (01.01.1901) காலையில் தம் அறுபத்தொன்பதாம் அகவையில் காலமானார்.
செம்மொழித் தகுதியை நிறுவுவதற்குக் காரணமாக இருக்கும் அடிப்படை நூல்களை அழிவின் வாயிலிருந்து மீட்டெடுத்து உலகிற்கு வழங்கியவர் தாமோதரனார். தொல்காப்பியம், கலித்தொகை, இறையனார் அகப்பொருள் ஆகிய நூல்களை இவர் முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். சிறந்த பதிப்பாசிரியர் என்று இன்று அனைவராலும் கொண்டாடப்படும் உ.வே.சா. சி.வை. தா.விற்கு அடுத்த காலக்கட்டத்தில்தான் பதிப்புத் துறையில் இறங்கியுள்ளார்.
உ.வே.சா.விற்குக் கிடைத்த புகழ் சி.வை.தா.விற்குக் கிடைக்கவில்லை. இது குறித்துப் பண்டிதமணி சி. கணபதி பிள்ளை தொடங்கி இலங்கைத் தமிழ் அறிஞர்கள் பலரும் யாழ்ப்பாணத்தில் பிறந்த குற்றத்திற்காக அவர் தமிழ் நாட்டுத் தமிழ் அறிஞர்களால் ஒதுக்கப்பட்டார் என்று மனம் வருந்துகின்றனர். சி.வை.தா.விற்கு உரிய சிறப்பை இப்போதாவது தமிழகம் செய்ய வேண்டும்.
சி.வை.தா. அவர்களைப் பற்றி உ.வே.சா. பின்வருமாறு கூறுகிறார்: "தமது ஓய்வு நேரத்தைத் தமிழ் ஆராய்ச்சியிற் பெரும்பாலும் செலவிட்டு, வீரசோழியம், தொல்காப்பியச் சொல்லதிகாரம், தொல்காப்பியப் பொருளதிகாரம், கலித்தொகை, இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம் என்பனவற்றின் மூலங்களையும், உரைகளையும் பல ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு பரிசோதித்து முதன்முதலாகப் பதிப்பித்து வெளியிட்டவர் இவரே. இக்காலத்தில் தமிழில் பல துறைகளில் ஆராய்ச்சி செய்வோருக்குப் பெருந் துணையாக இருப்பன இவர் வெளியிட்ட புத்தகங்களாகும். இவருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன்."
சீவக சிந்தாமணி நூலை உ.வே.சா. அவர்கள் 1887இல் வெளியிடுவதற்கு உதவியாக அதன் ஏட்டுப் படிகள் இரண்டினைத் தாமோதரனார் அவருக்குக் கொடுத்து உதவியுள்ளார். ஒரு சமயம் சிந்தாமணியை அச்சிடத் தாள் வாங்கக் காசில்லாமல் உ.வே.சா. மனம் வருந்தியபோது, சி.வை.தா. தனக்குத் தெரிந்த ஒரு தாள் வணிகர் மூலம் கடனில் தாள் ஏற்பாடு செய்துதவினார்.
சான்று:
தமிழ் வளர்த்த சான்றோர்கள், சென்னை 1997
டி. ஏ. இராசரத்தினம் பிள்ளை 'தாமோதரம் பிள்ளை அவர்கள்
சரித்திரம்' (சென்னை, 1934)
சி.வை.தா. பதிப்பித்த நூல்கள்
1852 நீதிநெறி விளக்கம்
1868 தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம்
1881 வீரசோழியம்
1883 இறையனாரகப்பொருள்
1883 தணிகைப் புராணம்
1885 தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம்
1887 கலித்தொகை
1889 இலக்கண விளக்கம்
1889 சூளாமணி
1891 தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
1892 தொல்காப்பியம் சொல்லதிகாரம்
இயற்றிய நூல்கள்
கட்டளைக் கலித்துறை
வசன சூளாமணி
சைவ மகத்துவம்
நட்சத்திரமாலை
பெற்ற பட்டம் : 1875 இராவ்பகதூர் பட்டம், சென்னை அரசு
இளமையில் கல்வி கற்க விரும்பி கிறித்துவ மதத்திற்கு மாறிஅக்காலத்தில் கிறித்துவர்களுக்கே மேலை நாட்டுக் கல்வி கற்கும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. ஆயினும், பிற்காலத்தில் ஆறுமுக நாவலரோடு அவருக்கு ஏற்பட்ட தொடர்பின் காரணமாக மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினார். கிறித்துவராக இருந்தபோது அவருடைய பெயர் சி.எல். டபிள்யூ. கிங்க்சுபரி (University of Madras) என்பதாகும்.
1901ஆம் ஆண்டு தைத் திங்கள் முதல் அவர் விட்டுச்சென்ற தமிழ்ப் பதிப்புப் பணியைத் தமிழகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
[ இக்கட்டுரை ஆக்கத்திற்கு உதவிய என் இளவல்கள் வே அழகுமுத்து, இரா.வெங்கடேசன், வே.பிரகாஷ் ஆகிய தமிழியல் ஆய்வாளருக்கும் இப்பணி நிறைவு வரை ஊக்கம் ஊட்டிய ஆய்வறிஞர் முனைவர் அரணமுறுவல் ஐயா அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி ……. ]
அதியமான்
தமிழியல் ஆய்வாளர்
1 comment:
நீங்கள் கொடுக்கும் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
Post a Comment