Saturday, December 21, 2024


நீ

SMS அனுப்ப ஆரம்பித்த பிறகு

oxford Dictionary

எனக்கு Bible ஆக

மாறிப் போனதை

நீ அறிவாயா !

சக்கரவாளக் கோட்டம் என்னும் சம்பாபதி அம்மன் கோவில்


சக்கரவாளக் கோட்டம் என்னும் சம்பாபதி அம்மன் கோவில்




 

முனைவர் கோ.சதீஸ் 
பேராசிரியர், தமிழ்த்துறை. 
அரசு கலைக்கல்லூரி, சீர்காழி arasu.athiyamaan75@gmail.com 



 பூம்புகார் பகுதியில் சாயாவனம் என்னும் ஊர் உள்ளது. இன்றும் இப்பகுதி இதே பெயரில் வழங்கப்பட்டு வருகின்றது. “ செந்நெலஞ் செறுவின் அன்னந் துஞ்சும் / பூக்கெழு படப்பைச் சாய்க் காட்டன்ன” (நற்.73) என நற்றிணையில் சாய்க்காடு என்று வழங்கப்பட்டுள்ளது. “நெடுங்கதிர்க் கழனித் தண் சாய்க் கானம்” (அகம்.220). என அகநானூற்றில் சாய்க்கானம் என வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருஞானசம்பந்தர் தம் தேவாரத்தில் “தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்” (திருமுறை&2) என சாய்க்காடு என வழங்கப்பட்டுள்ளது. மேலும் “காவிரிப்பூம் பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி” என்றும் கூறுவதால் சாய்க்காடு புகார் நகரத்தின் ஒரு பகுதி என அறியமுடிகிறது. பாரரக்கம் பயில் புகாரின் பல்லவனீச்சரம் (திருமுறை-1) எனத் தேவாரத்தில் பாடியுள்ளார். இவ்வழி சாய்க்காட்டின் தொன்மை கருதின் சிலம்பு கூறும் பிறவாயாக்கைப் பெரியோன் கோயில் இதுவாகத்தான் இருத்தல் வேண்டும் என்கிறார் பூம்புகார் ஆய்வாளர் புலவர் நா.தியாகராசனார் (கு.சக்திவேல், கோ.சதீஸ் 2022:79). சம்பாபதி அம்மன் கோயில் சாயாவனப்பகுதிக்கு அருகில் சம்பாபதி கோயில் உள்ளது. இன்று இது சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இது சோழர்களின் குலதெய்வம் என மணிமேகலை கூறுகிறது. சம்பாபதி கோவில் ஒரு சுடுகாட்டுக்கு அருகில் இருந்துள்ளது. இந்தக் கோவிலுக்குக் குஞ்சரக் குடிகை (குச்சரக் குடிகை) என்னும் வேறும் பெயரும் உண்டு. இங்குச் சம்பாபதி தெய்வம் வழிபடப்பட்டது என்னும் கதையும் நிலவுகிறது. சம்பாபதி அம்மனுக்குக் கன்னி, குமரி, முதியாள் என்ற வேறு பல பெயர்களும் உண்டு. சுடுகாட்டுக்குத் தென்புறத்துச் சுவருக்குத் தென்புறத்தில் (நாளங்காடிக்கு வடக்குப் புறத்தில்) இருந்த உவவனம் என்னும் பௌத்த மடத்துக்கும் சம்பாபதி கோவிலுக்கும் ஒரு வழி இருந்தது. உவவனத்திற்கு மேற்குப் பக்கத்தில் கோட்டைச் சுவரைச் சார்ந்து சிறுவாயில் இருந்தது. அந்த வாயில் வழியாக மேற்குப் பக்கம் சென்றால் சம்பாபதி கோவிலை அடையலாம். உவவனத்துக்குச் சென்ற சுதமதி என்பவள், உவவனத்திலிருந்து இந்த வாயில் வழியாகச் சக்கரவாளக் கோட்டமாகிய சம்பாபதிக் கோவிலுக்கு வந்தாள் என்று ‘மணிமேகலை’ கூறுவதிலிருந்து இதனை அறியலாம். ‘பெருந்தெரு ஒழித்துப் பெருவனஞ் சூழ்ந்த திருந்தெயில் குடபால் சிறுபுழைபோகி மிக்க மாதவர் விரும்பினர் உறையும் சக்கர வாளக் கோட்டம் புக்காற் கங்குல் கழியினும் கடுநவை எய்தாது’ என்றும், (சக்கரவாளக்கோட்டம் 21&25) ... .. ... .. ... .. ... .. ... .. பூம்பொழில் திருந்தெயிற் குடபால் சிறுபுழை போகி மிக்கமா தெய்வம் வியந்தெடுத் துரைத்த சக்கர வாளக் கோட்டத் தாங்கட் பலர்புகத் திறந்த பகுவாய் வாயில் உலக வறிவியின் ஒருபுடை யிருத்தலும்’ என்றும் மணிமேகலை (துயிலெழுப்பிய காதை 88&93) கூறுவதிலிருந்து பழைய தகவலை அறியமுடிகிறது. சம்பாபதி கோவிலுக்குச் சுடுகாட்டுக் கோட்டம் என்றும் சக்கர வாளக் கோட்டம் என்றும் வேறு பெயர்கள் இருந்துள்ளது. சுடுகாட்டுக்குப் அருகில் இருந்ததால் சுடுகாட்டுக்கோட்டம் என்று பெயர் வந்தது. ‘இடுபிணக் கோட்டத்து எயிற்புற மாதலிற் /சுடுகாட்டுக்கோட்ட மென்றலது உரையார்’ என்று மணிமேகலை (சக்கரவாளக்கோட்டம் 203&204) கூறுகிறது. சம்பாபதி கோவிலின் கோபுரவாயிலின் மேலே சக்கரவாளத்தின் சிற்ப உருவம் அமைக்கப்பட்டிருந்ததால், இந்தக் கோவிலுக்குச் சக்கரவாளக்கோட்டம் என்று பெயர் வந்தது என்று ‘மணிமேகலை’ சக்கரவாளக்கோட்ட முரைத்த காதையில் கூறுகிறது. குஞ்சரக்குடிகை என்னும் சம்பாபதிக் கோவிலிலே இரண்டு செங்கல் தூண்களில் கந்திற்பாவை (கந்து & தூண், பாவை & பதுவை) என்னும் இரண்டு தெய்வங்களின் உருவங்கள் அமைந்திருந்தன. கந்திற்பாவைகளில் ஒன்றுக்குத் துவதிகன் என்றும் மற்றொன்றுக்கு ஓவியச்சேனன் (சித்திரச்சேனன்) என்றும் பெயர். இந்தச் தெய்வப் பாவைகள் கடந்தகால நிகழ்ச்சிகளையும் எதிர்கால நிகழ்ச்சிகளையும் நகரமக்களுக்குத் தெரிவித்ததாக நம்பப்பட்டது. சம்பாபதிக் கோவிலைச் சார்ந்த உலகவறவி என்னும் அம்பலம் இருந்தது. இங்குக் குருடர், செவிடர், முடவர், ஆதரவு இல்லாதார் முதலியவர்களுக்குப் பௌத்த மதத்தார் உடை, உணவு, உறையுள் கொடுத்துப் போற்றினார்கள் என்று மணிமேகலை நூல் கூறுகிறது. சம்பாபதி தெய்வத்தின் திருவுருவம் ஒன்று, இப்போதைய காவிரிப்பூம்பட்டினத்தின் திருச்சாய்க்காட்டுக் கோவிலில் இருக்கிறது. இந்த உருவம், பிற்காலத்துச் சோழ அரசர் காலத்தில் பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட உருவம். அதே போல் திருவெண்காட்டுக் கோயிலிலும் சோழர்கால செப்புத்திருமேனிகளில் இந்தச் சம்பாபதி அம்மன் சிலையும் செய்யப்படு இன்றும் கோயிலில் உள்ளது. அதனை ஒத்த வடிவங்கள் தமிழகம் முழுவதும் காணப்படுகின்றன. ஆனால் அவை வேறு பெயர்களில் வழங்கப்படுவதைக் காணலாம். செப்புத்திருமேயாய் திருச்சாய்க்காட்டில் உள்ள சம்பாபதி சிலையை முதன்முதலாகப் புகைப்படம் எடுத்தவர் பூம்புகார் ஆய்வாளர் புலவர் நா.தியாகராசனார் ஆவார். அவர் எடுத்த புகைப்படத்தை என்னிடம் கட்டியதை நான் ஒரு படி படம் எடுத்துக் கொண்டேன். அப்படத்தையே இப்பகுதியில் இணைத்துள்ளேன். தமிழகத்தில் இன்று வழங்கும் மாரியம்மன் சிலையும், சம்பாபதி வடிவமும் ஒத்துள்ளதை அறியமுடிகிறது. சம்பாபதி வலது காலை மடித்த நிலையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். பிற்காலத்தில் வடிக்கப்பட்ட மாரியம்மன் சிலைகளில் இடது காலை மடித்து அமர்ந்த கோலத்தில் காட்சித் தரும்படி செய்யப்பட்டுள்ளது. நான்கு கைகள் அதில் வலது கையில் சூலம் உடுக்கையுடனும் இடது கையில் மழுபோன்ற ஆயுதமும் மற்றொரு கையில் கின்னம் போன்று உள்ளது. மேலும் மணிமேகலையில் வெங்கதிர் வெம்மையின் விரிசிறையிழந்த சம்பாதி இருந்த சம்பாதி வனமும் தவாநீர்க் காவிரிப் பாவைதன் தாதை கவேர னாங்கிருந்த கவேர வனமும் என்கிறது மணிமேகலை. (மணி.3:53-56). இச்சம்பாபதி அம்மன் கோயில் சாய்க் காட்டுத் திருக்கோயிலின் வடபுறத்தில் அமைந்துள்ளது எனவும், செங்கற்களால் கட்டிய இக்கோயில் இன்று சிதைந்த நிலையில் உள்ளது. தொல்பொருள் ஆய்வின் வழி இக்கோயிலின் கட்டடம் 11,12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது எனக் கணக்கிட்டுள்ளனர் என்கிறார். மணிமேகலையில் இச்சம்பாபதி அம்மன் குறித்த செய்திகள் விரிவாகக் கூறப் பெற்றுள்ளன. பிற்கால சோழர் காலத்தில் இக்கோயில் ஒரு முறை புணரமைக்கப்பட்டிருக்கலாம். ஒரு 1500ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயில் தமிழக அரசால் புணரமைக்கப்படுமா?

Saturday, June 6, 2020


கீழடி அகழாய்வும் தமிழர் பண்பாடும்

உலகில் மனிதர்கள் வாழத்தொடங்கிப்  பத்து லச்சம் ஆண்டுகள் ஆகின்றன. ஒற்றைச் செல் உயிரினமான அமிபாவில் இருந்து வளர்ந்த உயிரினம் பன்னெடுங்காலமாகப் பரிணாம வளர்ச்சியின் (evaluation) காரணமாக மனித சமூகமாக உருமாறியுள்ளது. பண்டைய காலத்தில் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பது நம்மால் எளிதில் அறிந்து கொள்ளமுடியாது ஆனால், அறிவியல் வளர்ச்சியின் காரணமாகத் தொன்மை மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றி கண்டறிய முடியும் அத்துறையே தொல்லியல் (Archaeology) துறையாகும்.
உலகில் பல்வேறு உயிரினங்கள் வாழந்தாலும் மனித சமூகம், தான் வாழ்ந்தற்கான அடையாளங்களை விட்டுச்செல்கின்றது.   மனித சமூகம் விட்டுச்சென்ற சான்றுகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.  ஒன்று தொல் மனிதர்களின் இறப்பிடம் (Burial Site).  மற்றொன்று தொல் மனிதர்கள்  வாழிடம் (Habitation Site).   
மனிதனின் தொன்மை நாகரீகத்தை வெளிப்படுத்துவது தொல்லியல் துறையாகும். இந்தியாவில் மத்திய தொல்லியல் துறை  (ASI - Archaeological Survey of India) மற்றும் மாநில தொல்லியல் (State Archaeology) துறை ஆகியவை செயல்படுகின்றன. தமிழகத்தில் பல இடங்களில் இது போன்ற கள ஆய்வுகள் நடந்துள்ளன. தமிழகத் தொல்லியல் துறையும் தமிழகத்தில் பரிக்குளம், பனைக்குளம், பூம்புகார், ஆழகன் குளம், தொண்டி, போன்ற 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வுகள் நிகழ்த்தியுள்ளன.
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகின்ற தமிழர் பண்பாட்டு வரலாற்றுடன் தொடர்புடையது கீழடி அகழாய்வாகும். கீழடி மதுரைக்கு அருகில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.  கீழடி மொத்தம் 110ஏக்கர் நிலப்பரப்பினை உடையது. தற்போது 5ஏக்கரில் மட்டுமே அகழாய்வுகள் நடந்துள்ளன. இதில் GPR எனப்படும் (Ground Penetrating Radar) புவி தொலைவுணர்வு மதிப்பாய்வு, MMS எனப்படும்  (Magneto Meter Survey) காந்த அளவி மதிப்பாய்வு, UAVS (Unmanned Aerial Vehicle Survey) ஆளில்லா வான்வழி வாகன மதிப்பாய்வு போன்ற  புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு 5 கட்டங்களாக அகழாய்வுகள் நடந்துள்ளன. அவை 2014-15, 2015-16, 2016-17ஆகியவை மத்திய தொல்லியல் துறையின் மூலம் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதன்பின் 2016-17, மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில் நான்காம் கட்டம் மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வுகள் தமிழகத் தொல்லியல் துறையின் மூலம் நடைபெற்றது.  
நான்காம் கட்ட அகழாய்வில் 5820 அரும்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இவை பண்டைய பண்பாட்டை வெளிக்கொணரும் வகையில் செங்கற் கட்டுமானங்கள், சுடுமண் உறைக் கிணறுகள், மழை நீர் வடியும் வகையில் விரல்களால் அழுத்தி பள்ளம் இடப்பட்ட அமைப்பைக் கொண்ட கூரை ஓடுகள் போன்றவையாகக் காணப்படுகின்றன. மேலும், அரும்பொருட்களும் விலை உயர்ந்த தங்க அணிகலன் பகுதிகள், உடைந்த பகுதிகள், செப்புப் பொருட்கள், இரும்புக்கருவி பாகங்கள், சுடுமண் சொக்கட்டான் காய்கள், வட்ட செல்கள், சுடுமண் காதணிகள், கண்ணாடி மற்றும் விலை உயர்ந்த மணி கற்கள் (அகேட் சூதுபவளம், ஸ்படிகம்) அக்கால மட்பாண்ட ஓடுகள் (கருப்பு சிவப்பு, கருப்பு, சிவப்பு பூச்சு மட்கலப் பகுதிகள்), ரௌலட்டட் மட்பாண்டங்கள், அரட்டின் ஓடுகள் ஆகியனவும் வெளிக் கொணரப்பட்டன.
பெரும்பாலான மட்பாண்டங்களில் கீறல்களும், குறியீடுகளும், வடிவங்களும் காணப்பட்டன. இவை சுடுவதற்கு முன்பும் பின்பும் பொறிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இவ்வகழாய்வில் கணிசமான எண்ணிக்கையில் (50க்கும் மேற்பட்ட)  தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கல துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இப்பொருட்கள் வாயிலாகக் கீழடிப் பகுதியில் பண்டைய காலத்தில் தமிழர் நாகரிகம் வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்ததும், இப்பகுதி மதுரையின் கிழக்குத் திசை நீட்சியாக விளங்கியிருக்க என்பதும் புலனாகிறது. பானை ஓட்டின் கீறல்களும், குறியீடுகளும் அதனொடு கிடைத்த பிராமி எழுத்துக்களும் கீழடி நாகரீகம் உருவாகிய காலத்தில் மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதனைப் தெளிவாக அறியமுடிகிறது. கீழடியில் மறைந்துள்ள தொல்பொருட்களை வெளிக்கொணர வேண்டியது காலத்தின் தேவை ஆகும். இனி வரும் காலங்களில் தமிழ்ச் சமுதாயத்தில் தொன்மை மிக்க பண்பாட்டுச் செல்வங்களை வெளிக்கொணரும் வகையில் அகழ்வாய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளன.
 



கி.மு. 6-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.1-ஆம் நூற்றாண்டு வரை வளமையான பண்பாடு கொண்ட பகுதியாகக் கீழடி விளங்கியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. தற்போது கிடைக்கப்பெற்றுள்ள சான்றுகளின் மூலம் வைகை நதிக்கரையில் நகரமயமாதல் கி.மு.6-ஆம் நூற்றாண்டிலிருந்து, தொடங்குகிறது என்பது தெளிவாகிறது. இதே காலக்கட்டத்தில்தான் வடஇந்தியாவின் கங்கை சமவெளிப் பகுதியிலும் நகரமயமாதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
கீழடி அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட விலங்குகளின் 70 எலும்புத் துண்டுகளின் மாதிரிகள், அறிவியல் அடிப்படையில் பகுப்பாய்வு செய்வதற்கு புனேவிலுள்ள முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான டெக்கான் கல்லூரிக்கு அனுப்பப்பட்டன. இந்த எலும்புத் துண்டுகள் பகுப்பாய்வின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தப்பட்டதில் இவை திமிலுள்ள காளை, எருமை, வெள்ளாடு, கலைமான், காட்டுப்பன்றி மற்றும் மயில் ஆகிய உயிரினங்களுக்குரியவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் திமிலுள்ள காளை, பசு, எருமை, வெள்ளாடு ஆகிய விலங்கினங்கள் 53 சதவீதம் இடம்பெற்றுள்ளன. எனவே, இவ்விலங்கினங்கள் வேளாண்மைக்கு உறுதுணை செய்யும் வகையில் கால்நடைகளாக வளர்க்கப்பட்டுள்ளன எனக் கருதலாம். ஆகவே கீழடி நாகரீகம் மேய்ச்சலைப் பிரதானமாகக் கொண்ட வேளாண் சமூகம் ஆகும்.
இரண்டாம் கட்ட அகழாய்வில் 13 மீட்டர் நீளமுள்ள மூன்று வரிசை கொண்ட சுவர் ஒன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சுவரில் 38x23x6 அளவு மற்றும் 38x26x6 அளவு கொண்ட இரண்டு விதமான செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. செங்கல்லின் அகலம் மட்டுமே சிறிது மாறுபட்டு இருக்கிறதே தவிர நீளம் மற்றும் தடிமன் ஆகியவை ஒரே அளவில் உள்ளது எனவே தமிழர்கள் கட்டுமானத் தொழிநுட்பத்தைப் பெற்று இருந்தனர் மேலும், கட்டிடக்கலை கணித அறிவின் அடிப்படையில் உருவாகக்கக் கூடியது. இந்தக் கீழடி அகழாய்வின் மூலம் தமிழர்களின் கட்டிடக் கலை மற்றும் கணித அறிவினை வெளிக்கொணரும் வகையில் அமைந்துள்ளது.   
ஆடைகள் நெய்வதற்கான நெசவுத்தொழில் கருவிகள், மருந்து அரைக்கும் கல்லினாலான கருவிகள், தந்தத்தினால் ஆன சீப்பு, குறுகிய வாயுடைய நீர்க்குடுவைகள், பல வண்ண மணிகள், தங்கத்தால் ஆன தாயக்கட்டைகள் போன்ற பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை அந்தக் காலத்தின் நகர நிலையினை எடுத்துக்காட்டுவதுடன் தமிழர் நாகரீகம் தமிழின் தொன்மை, தமிழர் பண்பாட்டு மரபுகள் வணிகத் தொடர்புகள் ஆகியவற்றைச் சேர்த்தே வெளிப்படுத்துகின்றன. தமிழத்தில் ஆகழாய்வுச் செய்யப்பட்ட பகுதிகளில் மிக முக்கியமானதாக விளங்குவது கீழடி அகழாய்வாகும்.




தங்கத்தினால் ஆன தாயம் விளையாடும் காய்கள்
முனைவர் கோ.சதீஸ்
உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை
பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
புத்தூர் - சீர்காழி

Powered By Blogger

Followers

About Me

My photo
Sirkazhi, Tamil Nadu, India
தமிழியல் ஆய்வாளர்